அமராவதி: ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என பெட் கட்டி சூதாட்டம் ஆடிய ஜக்கவரபு வேணுகோபால ரெட்டி 3 கோடியை இழந்துள்ளார். இதனால் கடன் நெருக்கடிக்கு ஆளான அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.ஆந்திர மாநிலத்தில் கடந்த வாரம் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அதை வைத்து அங்கு மிகப் பெரியளவில் சூதாட்டம் நடந்துள்ளது. இதில் குறுகிய காலத்தில் பணக்காரனாக விரும்பிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸை சேர்ந்தவர்கள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்: ஆந்திரப் பிரதேச மாநிலம் எலுரு மாவட்டத்தில் உள்ள துர்புடிகவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜக்கவரபு வேணுகோபால ரெட்டி.. இவர் ஆந்திர தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெல்லும் எனச் சொல்லி பெட் கட்டி சூதாட்டம் ஆடியுள்ளார். இருப்பினும், இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் படுதோல்வி அடையவே இவ் சுமார் 30 கோடி ரூபாயை இழந்துள்ளார். இதனால் என்ன செய்வதென்றே புரியாமல் விழித்த 52 வயதான ஜக்கவரபு வேணுகோபால ரெட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொண்ட வேணுகோபால ரெட்டி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. ஆந்திராவில் நடந்த முடிந்த தேர்தலில் அங்குள்ள பல தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெல்லும் என அவர் சூதாட்டத்தில் பெட் கட்டியிருக்கிறார். நுசிவீடு மண்டல் தொகுதியில் ஜெகன் கட்சி வெல்லும் என அவர் பெட் கட்டியிருக்கிறார்.
நஷ்டம்: ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இந்த முறை ஆந்திராவில் படுதோல்வி அடைந்தது. சந்திரபாபு நாயுடு அலையால் ஆந்திராவில் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட ஜெகன் கட்சியால் பெற முடியவில்லை.. நுசிவீடு மண்டல் தொகுதியிலும் ஜெகன் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் வேணுகோபால ரெட்டிக்கு மிகப் பெரியளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மிகப் பெரிய மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
லோக்சபா தேர்தல் முடிவுகளுடன் ஆந்திர தேர்தல் முடிவுகளும் ஜூன் 4ஆம் தேதி வெளியானது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது ஜெகன் கட்சி பெரும்பாலான இடங்களில் பின்னடைவையே எதிர்கொண்டு இருந்தது. இதனால் வேணுகோபால ரெட்டி வாக்கு எண்ணிக்கை தொடங்கிய உடனேயே தனது கிராமத்தில் இருந்து மாயமானார்.
மாயம்: ஏனென்றால் அவர் தனது கட்சி வெல்லும் என்ற அதீத நம்பிக்கையில் பலரிடம் இருந்து கடன் வாங்கி சூதாட்டத்தில் பெட் கட்டி இருக்கிறார். இருப்பினும் தேர்தல் முடிவுகள் நேர்மாறாக வந்ததால் அவர் மாயமானார். இதையடுத்து கடந்த ஜூன் 7 ஆம் தேதி வேணுகோபால ரெட்டிக்கு கடன் கொடுத்தவர்கள் அவரது வீட்டிற்குள் புகுந்து பிரிட்ஜ், சோபாக்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். விஷம் குடித்து தற்கொலை: அதற்கு மறுநாள் தான் அவர் தனது சொந்த கிராமத்திற்குத் திரும்பியிருக்கிறார். அவருடைய வீடு கடன் கொடுத்தவர்களால் நாசம் செய்யப்பட்டதை அறிந்த வேணுகோபால ரெட்டி வேதனை அடைந்துள்ளார். அதேநேரம் மேலும் சிலர் வாங்கிய கடனை திரும்பக் கட்ட சொல்லி அழுத்தம் கொடுத்துள்ளனர்.
இதனால் என்ன செய்வதென்று புரியாமல் வேணுகோபால ரெட்டி பூச்சி மருந்தைச் சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். வேணுகோபால ரெட்டியின் மனைவி அளித்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். வேணுகோபால ரெட்டியை போலவே ஒய்எஸ்ஆர் காங்கிரஸை சேர்ந்த பலரும் சூதாட்டத்தில் பெட் கட்டி பெருந்தொகையை இழந்தாக சொல்லப்படுகிறது.





















