சாஸ்திரங்கள் சொல்லும் ரகசியம்

கால் வைக்கக் கூடாத 5

1. பசு – நம் பாரம்பரியத்தில் பசு, காமதேனு என்ற தெய்வீக அம்சமாக கருதப்படுகிறது. இந்து சமயத்தில் பசு மிகவும் புனிதமானதாக மதிக்கப்படுகிறது. பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்கிறார்கள் என்பது ஐதீகம். அதனால் பசுவை ஒரு போதும் அவமதிக்கக்கூடாது. பசுவை மிதிப்பது அல்லது காலால் தள்ளுவது மிகவும் தவறாக கருதப்படுகிறது. தெரியாமல் பசுவின் மீது கால்பட்டாலும் உடனே அதை தொட்டு வணங்குவது நல்லது என்று பெரியவர்கள் கூறியுள்ளனர்.

2. துளசி மற்றும் வேம்பு இலைகள் – தாவரங்களில் துளசியும் வேம்பும் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. துளசி செடியில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறார் என்று நம்பப்படுகிறது. அதனால் துளசி இலைகளை காலால் மிதிப்பது பெரிய தவறாக கருதப்படுகிறது. அதே போல் வேம்பு மரத்தில் மாரியம்மன் வாசம் செய்கிறார் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் வேப்பிலைகளையும் ஒருபோதும் கால்களில் மிதிக்கக்கூடாது.

3. உணவுப் பொருட்கள் – உணவு என்பது மனித வாழ்வின் அடிப்படை. சாஸ்திரங்களில் உணவு, அன்னபூரணி தேவியின் அருள் என்று கருதுகின்றனர். அதனால் எந்த உணவுப் பொருளையும் காலால் மிதிப்பது மிகப் பெரிய பாவமாக கருதப்படுகிறது. குறிப்பாக உப்பின் மீது கால் வைக்கக் கூடாது என்று பெரியவர்கள் எச்சரித்துள்ளனர். உப்பு என்பது செல்வத்தின் அடையாளமாகவும் வளத்தின் சின்னமாகவும் கருதப்படுகிறது. உப்பை அவமதித்தால் வீட்டில் பொருளாதார பிரச்சனைகள் ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது. அதேபோல் உணவு வைக்கும் பாத்திரங்களையும் காலால் தொடக்கூடாது. அவ்வாறு செய்வது வீட்டில் உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

4. வழிபாட்டு பொருட்கள் – வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் புனிதமானவை. பூஜை தட்டு, தீபம், கற்பூரம், படையல் வைக்கும் பொருட்கள் போன்றவற்றை காலால் தொடுவது மிகவும் தவறாக கருதப்படுகிறது. அவற்றை அவமதிப்பவர்கள் வாழ்க்கையில் உணவிற்கே கையேந்தும் நிலை வரலாம் என்று சாஸ்திரங்களில் எச்சரிக்கை உள்ளது.

5. துடைப்பம் – வீட்டில் இருக்கும் துடைப்பமும் ஒரு சாதாரண பொருள் அல்ல. அது தூய்மையின் அடையாளம் என்று கருதப்படுகிறது. ஒரு வீட்டை சுத்தமாக வைத்திருக்க முக்கிய காரணம் துடைப்பமே. அதனால் அதை காலால் மிதிப்பது நல்லதல்ல என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. துடைப்பம் வீட்டிலிருந்து வறுமையை துடைத்து வெளியேற்றும் ஒரு சின்னமாகவும் கருதப்படுகிறது. அதனால் அதை எப்போதும் மரியாதையுடன் வைத்திருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here