தேசிய தினக் கொண்டாட்டத்தில் நெரிசல் ஏற்படுத்தியதாகப் புகார்: ஒருவர் கைது; 1 நாள் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

கோலாலம்பூர்:

புத்ராஜெயா சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது, பார்வையாளர்களுக்கான பாதுகாப்புத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு முன்னேறுமாறு பொதுமக்களைத் தூண்டியதாக 30 வயதுச் சமையல்காரர் ஒருவரைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி அதிகாலையில், அணிவகுப்பைப் பார்வையிடுவதற்கான இருக்கைகளைக் கைப்பற்றுவதற்காகப் பொதுமக்களை முன்னால் செல்லுமாறு அவர் தூண்டியுள்ளார். இதனால் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிலர் கீழே தள்ளப்பட்டுப் பலத்த காயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்துப் பெறப்பட்ட 5 போலிஸ் புகார்களின் அடிப்படையில், ‘ஆரஞ்சு நிறச் சட்டை’ அணிந்திருந்த அந்தச் சந்தேக நபர் நேற்று (செப்டம்பர் 1) மதியம் புத்ராஜெயாவில் வைத்துப் போலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இக்கைது நடவடிக்கையை உறுதிப்படுத்திய கோலாலம்பூர் மாநகரப் போலிஸ் தலைமை அதிகாரி டத்தோ ஃபாதில் மார்சஸ், சந்தேக நபரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 505(b) (பொதுமக்களுக்கு அச்சம் அல்லது குழப்பத்தை ஏற்படுத்துதல்), தகவல் தொடர்பு மற்றும் பன்முக ஊடகச் சட்டம் 1998-இன் பிரிவு 233, மற்றும் சிறு குற்றங்கள் சட்டம் 1955-இன் பிரிவு 14 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி எஸ்ரீன் ஜகாரியா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த நபருக்கு, விசாரணைக்கு உதவும் வகையில் ஒரு நாள் தடுப்புக் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here