இணையக் குற்றங்களிலிருந்து சிறார்களைப் பாதுகாப்பது அனைவரின் கடமை; பொறுப்பு – சாரா லியோங்

கோலாலம்பூர்,

நவீனமடைந்து வரும் இணைய புரட்சியில் சிறார்கள் பதின்ம வயதினரின் பாதுகாப்பு தொடர்பில் ஒட்டுமொத்த சமூகமும் விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். இன்றைய காலத்தில் இணைய பயன்பாடு நமது வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்ட நிலையில் அதனை பாதுகாப்பாக கையாள்வது அவசியமாகிறது என்று செயற்கை நுண்ணறிவு (AI), இணையச் சட்டம், தரவுப் பாதுகாப்புக் குழுவின் தலைவர் சாரா யோங் லீ சியேன் (Sarah Yong Li Hsien) அண்மையில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் தெரிவித்தார்.

கே: மலேசிய வழக்கறிஞர் மன்றம், பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் பாதுகாப்பிற்காகவும் பொதுநலனை நிலைநிறுத்துவதற்காகவும் தொடர்ந்து வாதிட்டு வருகிறது. இன்றைய டிஜிட்டல் சூழலில் இணையத்தில் சிறார்கள், இளம் பயனர்களுக்கான பாதுகாப்புகளை வலுப்படுத்துவது எவ்வளவு முக்கியம்?

ப: அச்சமோ பாரபட்சமோ இன்றி சட்ட நிபுணத்துவச் சட்டத்தின் கீழ் செயல்படுவதே மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முதன்மை நோக்கமாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். டிஜிட்டல் சூழலைப் பொறுத்தவரை இணையத்தில் சிறார்கள், இளம் பயனர்களுக்கான பாதுகாப்புகளை வலுப்படுத்துவது மிக முக்கியமாகும்.

சிறார்கள் தங்களின் வளர்ச்சி நிலை, குறைந்த டிஜிட்டல் கல்வியறிவு, பெரியவர்கள் மற்றும் தள இயக்குநர்களுடனான அதிகார ஏற்றத்தாழ்வுகள் காரணமாகப் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் அதிகமாக உள்ளது. இருப்பினும் மாற்றுத்திறனாளிகள் அல்லது விளிம்புநிலைக் குழுக்கள் போன்ற பிற குழுக்களும் டிஜிட்டல் சூழலில் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர். உண்மையில் அனைத்துப் பயனர்களுக்கும் பெரியவர்களுக்கும் கூட பாதிப்புகள் உள்ளன. குறிப்பாக சமமற்ற பேரம் பேசும் சக்தி இருக்கும் இடங்களில் இத்தகைய அபாயச் சூழல் உள்ளது.

குற்றவியல் சட்டம், இணையப் பாதுகாப்புச் சட்டம், சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் போன்ற சட்டங்களை நியாயமாகவும் திறம்படவும் அமல்படுத்த வேண்டும்.

கே: சட்டம், உரிமைகள் சார்ந்த கண்ணோட்டத்தில் இணையவழிக் கொடுமைப்படுத்துதல், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல், சுரண்டல், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திற்கு ஆளாகுதல் உள்ளிட்ட சிறார்களைப் பாதிக்கும் அதிகரித்து வரும் இணையவழித் தீங்குகளுக்கு சமூகம் எவ்வாறு பதிலளிக்க வேண்டும்?

ப: இதில் பல்வேறு அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாகத் தடுப்பு, பாதுகாப்பு, நிவாரணம் ஆகிய கூறுகளைக் கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.

தடுப்பு:

சிறார்கள், பெற்றோர், கல்வியாளர்களுக்கான கல்வி, டிஜிட்டல் எழுத்தறிவு, தளங்களால் பாதுகாப்பான தயாரிப்பு வடிவமைப்பு, பொது விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

வழக்கறிஞர் மன்றத்தின் இணையம், தனியுரிமைச் சட்டக் குழு, இணையவழிக் கொடுமைப்படுத்துதல் குறித்த கருத்தரங்குகளை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் சிறார்கள் உரிமைக் குழு, கல்வியாளர்கள், வழக்கறிஞர்களுக்காக இணையவழிச் சீண்டல் தடுப்புத் திட்டங்களையும் இணையவழிக் கருத்தரங்குகளையும் ஏற்பாடு செய்துள்ளது.

இதன் மூலம் பள்ளிகள், சமூகத்தில் உள்ள இணையவழி அபாயங்கள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவை ஆசிரியர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் வழங்குகிறது.

பாதுகாப்பு:

சீண்டல், பாலியல் சுரண்டல், இலக்கு வைக்கப்பட்ட துன்புறுத்தல் ஆகியவற்றுக்கு எதிரான தெளிவான சட்டத் தடைகள், பயனுள்ள புகாரளித்தல், அமலாக்க வழிமுறைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

சிறார்களுக்கு எதிரான 2017 பாலியல் குற்றங்கள் சட்டம் (SOACA), சிறார் பாலியல் துஷ்பிரயோகம், இணையவழிச் சுரண்டல், அது தொடர்பான குற்றங்களைக் குற்றமாக்குகிறது. பின்னர் இது (2023) திருத்தப்பட்டு புதிய பாலியல் குற்ற விதிகள், சிறார் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு உத்தரவு கட்டமைப்பை அறிமுகப்படுத்தியது.

இணையம் வழிப் பாலியல் துஷ்பிரயோகங்களைக் களைய பெற்றோர், ஆசிரியர்கள், சமூகம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சம்பவங்களைப் புகாரளிக்க முன்முயற்சியுடன் முதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நிவாரணம்:

பாதிக்கப்பட்டவர்களுக்கு எளிதில் அணுகக்கூடிய தீர்வுகள், 2025 ஆன்லைன் பாதுகாப்புச் (ONSA) சட்டத்தின் கீழ் வெளிப்படையாகச் சட்டவிரோதமான உள்ளடக்கத்தை விரைவாக அகற்றுதல், பாதுகாப்பான புகாரளிப்பு வழிகள், ஆதரவு சேவைகள் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.

SOACA திருத்தங்கள் இழப்பீட்டு உத்தரவுகளை அறிமுகப்படுத்தின. இது குற்றவியல் தண்டனைகளுக்குப் பொருள் சார்ந்த நிவாரணத்துடன் கூடுதலாகப் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு பண இழப்பீடு வழங்கக் குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்கள் உத்தரவிட வழிவகை செய்கிறது.

வழக்கறிஞரை நியமிக்க வசதியில்லாதவர்களுக்கு சட்டச் சேவைகளை வழங்க வழக்கறிஞர் மன்றம் அனைத்து மாநிலங்களிலும் சட்ட உதவி மையங்களைக் கொண்டுள்ளது.

அனைத்து நடவடிக்கைகளும் சட்ட நடைமுறை, தனியுரிமை, கருத்துச் சுதந்திரத்தை மதிக்க வேண்டும்.

கே: டிஜிட்டல் தளங்கள் சிறார்கள், பதின்ம வயதினர் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள், கற்கிறார்கள், தகவல்களை அணுகுகிறார்கள் என்பதைப் பெருகிய முறையில் வடிவமைக்கும் நிலையில், பயனர்கள், பெற்றோர், தளங்கள், ஒழுங்குபடுத்துபவர்களுக்கிடையே பொறுப்பும் கடமையுணர்வும் எவ்வாறு சமநிலைப்படுத்தப்பட வேண்டும்?

ப: 16 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கான முழுமையான விலக்கு அணுகுமுறைகளுக்கு, சிறார்களின் இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தானாகவே வழிவகுக்கக்கூடாது என்று மலேசிய வழக்கறிஞர் மன்றம் கருதுகிறது.

சிறார்களுக்கு உகந்த வடிவமைப்பு அம்சங்கள், பாதுகாப்பான இயல்புநிலை அமைப்புகள், வயதுக்கு ஏற்ற பாதுகாப்புகள் போன்ற விகிதாச்சார, உரிமைகளை மதிக்கும் மாற்று வழிகளுக்கும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

எனவே இணையப் பாதுகாப்பிற்கான பொறுப்பு, திறன், செல்வாக்கிற்கு ஏற்பப் பிரிக்கப்பட்ட பங்குகளுடன் பகிரப்பட வேண்டும் பெற்றோர், பராமரிப்பாளர்கள் மேற்பார்வை செய்ய வேண்டும். வரம்புகளை நிர்ணயிக்க வேண்டும். சிறார்களின் டிஜிட்டல் கல்வியறிவை ஆதரிக்க வேண்டும்.

பெற்றோர் தங்கள் சிறார்களின் இணையச் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் உதவும் பெற்றோர் கட்டுப்பாட்டுக் கருவிகளை வழங்குவதற்காக எம்சிஎம்சி ஐந்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுடன் இணைந்து செயல்படுகிறது.

அரசாங்கமும் எம்சிஎம்சியும் பெற்றோர், பாதுகாவலர்களுக்காகச் சிறார்களின் இணையப் பாதுகாப்பு குறித்த கல்வி நடைமுறைகளை உருவாக்கி வருகின்றன.

மலேசிய வழக்கறிஞர் மன்றம் இணையவழிச் சீண்டல், இணையவழிக் கொடுமைப்படுத்துதல், இணையவழிச் சுரண்டல், தடுப்புச் சட்டக் கல்வி நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சிபிடி/இணையவழிக் கருத்தரங்குகள், சுற்றறிக்கைகள் மூலம் சிறார்களின் இணையவழிப் பாதுகாப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here