மலாக்கா மாநிலத் தேர்தல்: “இன்னும் ஒரு வெள்ளிக்கிழமையா? நான் ஊடகங்களை அழைக்கும் போது வந்துவிடுங்கள்” – அப்துல் ரவூஃப்

(ரெ.மாலினி)

மலாக்கா:

லாக்கா மாநில சட்டமன்றம் கலைக்கப்படும் தேதி குறித்து கேட்கப்பட்டபோது, மலாக்கா முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரவூஃப் யூசோ“இன்னும் ஒரு வெள்ளிக்கிழமையா? நான் அழைக்கிறேன். ஊடகங்களை அழைக்கும் போது வந்துவிடுங்கள்” என்று பதிலளித்தார்.

எனினும், அடுத்த வாரம் சட்ட மன்றம் கலைக்கப்படும் என்று அவர் உறுதிப்படுத்தவில்லை. கலைப்பு தேதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

“அனைவரும் எப்போது கலைக்கப்படும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது இனி ரகசியமான விஷயம் அல்ல. சரியான நேரத்துக்காகக் காத்திருக்கிறோம். ஆனால் அந்த நேரம் எப்போது என்பது இன்னும் எனக்குத் தெரியவில்லை,” என்று அவர் கூறினார்.

மஸ்ஜிட் தானாவில் வியாழக்கிழமை நடைபெற்ற மலாக்கா மாநில அளவிலான முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் தின நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை முதல் அடுத்த வெள்ளிக்கிழமை வரை’ என்ற தனது குறிப்பிட்ட காலக்கெடு சட்ட மன்ற கலைப்பு தேதியைக் குறிக்கவில்லை என்றும், தேர்தல் முன்பாக மாநில நிர்வாகம் தொடர்பான மீதமுள்ள பணிகளை முடிப்பதற்கான ஒரு காலக்குறியீடாகவே அது குறிப்பிடப்பட்டது என்றும் அப்துல் ரவூஃப் விளக்கினார்.

“அந்த காலப்பகுதிக்குள் மலாக்கா மாநில நிர்வாகத்திற்காக இன்னும் பல விஷயங்களை முடிக்க வேண்டியுள்ளது. அதனால்தான் வெள்ளிக்கிழமை முதல் அடுத்த வெள்ளிக்கிழமை வரை என்ற காலக்குறியீட்டை வழங்கினேன்.

“இன்ஷா-அல்லாஹ், மலாக்கா தேர்தல் நிச்சயமாக மிக விரைவில் நடைபெறும். நான் ஊடகங்களை அழைக்கும் போது, நீங்கள் வந்து விடுங்கள்,” என்றார்.

இதற்கு முன்னர், மலாக்கா தேர்தல் நடைபெறும் தேதி குறித்து கேட்கப்பட்டபோது, ‘நான்கு வெள்ளிக்கிழமைகள்’ என்றும் பின்னர் ‘இரண்டு வெள்ளிக்கிழமைகள்’ என்றும் அப்துல் ரவூஃப் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, கடந்த செவ்வாய்க்கிழமை மலாக்கா மாநில ஆளுநர் துன் ஸ்ரீ செத்தியா டாக்டர் முகமட் அலி முகமட் ருஸ்தாம் மற்றும் அப்துல் ரவூஃப் ஆகியோர் இணைந்து சட்ட மன்ற கலைப்பு ஆவணத்தில் கையெழுத்திட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.

ஆனால், இந்தக் கூற்று உண்மையல்ல என மலாக்கா முதலமைச்சர் அலுவலகம் மறுத்துள்ளது. இதுபோன்ற சந்திப்பு நடைபெற்றதாக தங்களுக்கு இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என முதலமைச்சர் அலுவலகத்தின் ஊடகத் தொடர்புத் தலைவர் நோர் ஹபிசா முகமட் சாத்தி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here