பிலிப்பைன்ஸில் இணைய மோசடியில் சிக்கிய 8 மலேசியர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் மீட்பு

மணிலா:

பிலிப்பைன்ஸில் உள்ள இணைய மோசடி நிலையத்தில் கட்டாயமாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கானோர் மார்ச் 14ஆம் தேதி காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

சோதனையின்போது சந்தேக நபர்கள் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது.

மணிலாவுக்கு வடக்கே பம்பான் எனுமிடத்தில் இணைய விளையாட்டு நிறுவனம் என்ற போர்வையில் செயல்பட்ட மோசடி நிறுவனம் 100,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

அங்கிருந்து தப்பியதாகக் கூறும் வியட்னாமியர், பிலிப்பைன்ஸ் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார். அதையடுத்து, ஆட்கடத்தலுக்கு ஆளானோர் இணைய மோசடி வேலைகளில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்படுவதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் நடவடிக்கை மேற்கொண்டதாகக் காவல்துறை கூறியது.

இணையக் காதல் மோசடி, மின்னிலக்க நாணய மோசடி உட்படப் பல்வேறு மோசடிச் செயல்களில் அந்த மோசடிக்காரர்கள் ஈடுபடுவதாக மீட்கப்பட்டோர் காவல்துறையிடம் கூறினர்.

பாதிக்கப்பட்டோரின் கடப்பிதழ்களை மோசடிக்காரர்கள் பறிமுதல் செய்ததாகவும் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு வேலை செய்யாதோர் துன்புறுத்தப்பட்டதாகவும் தெரிகிறது.

மீட்கப்பட்டோரில் 8 மலேசியர்கள், 432 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள், 371 பேர் பிலிப்பினோக்கள், 57 பேர் வியட்னாமியர்கள், 3 பேர் தைவானைச் சேர்ந்தவர்கள், இருவர் இந்தோனீசியர்கள், இருவர் ருவாண்டாவைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here