MIHAS 2026: மலேசிய ஏற்றுமதியாளர்களுடன் 450 வெளிநாட்டு வர்த்தகர்கள்! 4,000க்கும் மேற்பட்ட வர்த்தகச் சந்திப்புகளுக்கு ஏற்பாடு!

கோலாலம்பூர், செப். 23 –

மலேசியாவின் ஹலால் தொழில்துறையை அனைத்துலக அளவில் விரிவுபடுத்தும் நோக்கில் நடைபெற்ற 22ஆவது மலேசிய அனைத்துலக ஹலால் கண்காட்சியில் (MIHAS 2026), 58 நாடுகள் மற்றும் பொருளாதாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 450 வெளிநாட்டு வர்த்தகர்கள், மலேசியாவின் 600 ஏற்றுமதியாளர்களுடன் வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெற்றனர்.

கோலாலம்பூரில் உள்ள மலேசிய அனைத்துலக வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் (MITEC), செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சியின் முக்கிய அங்கமாக அனைத்துலகப் பொருட்கள் கொள்முதல் திட்டம் (INSP) இடம்பெற்றது.

மலேசிய ஏற்றுமதியாளர்களுக்கும் வெளிநாட்டு வர்த்தகர்களுக்கும் இடையே 4,000க்கும் மேற்பட்ட நேரடி வர்த்தகச் சந்திப்புகளை நடத்துவதற்கு இத்திட்டத்தின் கீழ் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மலேசிய வெளிநாட்டு வர்த்தக மேம்பாட்டுக் கழகமான MATRADE ஏற்பாடு செய்த இந்தத் திட்டத்தில் பங்கேற்ற சுமார் 450 வெளிநாட்டு வர்த்தகர்களில், அதிக அளவில் கொள்முதல் செய்யும் திறன்கொண்ட 50 முக்கிய வர்த்தகர்களும் இடம்பெற்றிருந்தனர்.

மலேசியப் பொருட்களுக்கு உலகச் சந்தையில் வரவேற்பு!

மலேசியாவின் ஹலால் உணவுப் பொருட்கள், பானங்கள் மற்றும் சேவைகளுக்கான அனைத்துலகத் தேவையை மேலும் அதிகரிப்பதுடன், உள்நாட்டு நிறுவனங்கள் புதிய ஏற்றுமதிச் சந்தைகளில் கால்பதிப்பதற்கும் இந்தத் திட்டம் முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

குறிப்பாக, வடகிழக்கு ஆசியா மற்றும் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் அதிக அளவில் பங்கேற்றதுடன், ஆப்பிரிக்க நாடுகளின் பங்கேற்பும் அதிகரித்திருந்தது.

கொமொரோஸ் மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகள் முதன்முறையாக இத்திட்டத்தில் பங்கேற்று, மலேசியாவின் ஹலால் பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொள்முதல் செய்வதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்தன.

2030ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய ஹலால் சந்தையின் மதிப்பு 10 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மலேசிய நிறுவனங்கள் இந்த வளர்ச்சியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு முக்கிய வாய்ப்பு!

MIHAS கண்காட்சியின் வளர்ச்சிக்கு அனைத்துலகப் பொருட்கள் கொள்முதல் திட்டம் முக்கிய உந்துசக்தியாக விளங்குவதாக MATRADE தலைவர் டத்தோஸ்ரீ ரீசால் மெரிக்கான் நைனா மெரிக்கான் தெரிவித்தார்.

மலேசியாவின் தரமான ஹலால் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதில் வெளிநாட்டு வர்த்தகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதால், உள்நாட்டு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“MIHAS கண்காட்சியின் முக்கிய அடித்தளமாக அனைத்துலகப் பொருட்கள் கொள்முதல் திட்டம் விளங்குகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் மலேசிய நிறுவனங்கள் அதிக மதிப்புள்ள அனைத்துலக வர்த்தகச் சந்தைகளில் நுழைவதற்கான வாய்ப்பைப் பெறுகின்றன.

“இது உள்நாட்டு நிறுவனங்களின் ஏற்றுமதி வளர்ச்சியை நீண்டகால அடிப்படையில் வலுப்படுத்த உதவும்,” என்று அவர் தெரிவித்தார்.

RM700 பில்லியன் வருமானம் கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள்!

இந்தத் திட்டத்தில் பங்கேற்ற முக்கிய வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களின் ஒட்டுமொத்த ஆண்டு வருமானம் ஏறக்குறைய RM700 பில்லியனாக இருப்பதாக ரீசால் மெரிக்கான் குறிப்பிட்டார்.

இந்த நிறுவனங்களின் கொள்முதல் ஆர்வம் உணவு மற்றும் பானப் பொருட்களுடன் மட்டும் நின்றுவிடாமல், சிறப்பு மூலப்பொருட்கள், உயிரித் தொழில்நுட்பம், இஸ்லாமிய நிதிச் சேவைகள், போக்குவரத்து மற்றும் பொருள் விநியோகச் சேவைகள், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் விரிவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் மலேசியாவின் ஏற்றுமதி நடவடிக்கைகளைப் பல்வேறு துறைகளுக்கு விரிவுபடுத்துவதுடன், அனைத்துலக விநியோகச் சங்கிலிகளில் உள்நாட்டு நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

செப்டம்பர் 23ஆம் தேதி MITEC மையத்தில் நேரடி வர்த்தகச் சந்திப்புகள் நடைபெற்ற நிலையில், இணையவழி அனைத்துலகப் பொருட்கள் கொள்முதல் திட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த இணையவழித் திட்டத்தின் மூலம் மேலும் 150 வெளிநாட்டு வர்த்தகர்கள் மலேசிய ஏற்றுமதியாளர்களுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

14 துறைகளை உள்ளடக்கிய MIHAS கண்காட்சி!

2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட MIHAS கண்காட்சி, இன்று உலகளாவிய ஹலால் வர்த்தகத்தை மேம்படுத்தும் முக்கியத் தளங்களில் ஒன்றாக வளர்ச்சியடைந்துள்ளது.

மலேசிய முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சின் கீழ் MATRADE ஏற்பாடு செய்த 22ஆவது MIHAS கண்காட்சி, செப்டம்பர் 23 முதல் 26ஆம் தேதி வரை நடைபெற்றது.

உணவு மற்றும் பானங்கள், மருந்துப் பொருட்கள், இஸ்லாமிய நிதிச் சேவைகள், முஸ்லிம் ஆடை அலங்காரம், தனிநபர் பராமரிப்புப் பொருட்கள், தொழில்நுட்பம் மற்றும் முஸ்லிம் சுற்றுலா உள்ளிட்ட 14 துறைகள் இதில் இடம்பெற்றன.

‘Shaping Trust, Driving Resilience’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்தக் கண்காட்சி, மலேசியாவின் ஹலால் தொழில்துறையை உலகச் சந்தையில் மேலும் வலுப்படுத்துவதையும், உள்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்குப் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.     

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here