ஜோகூர் பாரு:
ஜோகூர் பாரு நகரில் ஏற்படும் திடீர் வெள்ளப் பெருக்குக்கு உடனடி மற்றும்நீண்ட காலத் தீர்வுகளைக் காண்பதற்காக கூடுதல் RM30 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக ஜோகூர் மாநில அரசு அறிவித்துள்ளது.
நகரப் பகுதியின் வடிகால் அமைப்புகளை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை நியமித்தல், நிலத்தடி நீர் தேக்கும் மையங்களை (OSD) அமைத்தல், நீர் இறைக்கும் பம்புகளின் திறனை அதிகரித்தல் மற்றும் பருவமழை வடிகால்களைத் தரம் உயர்த்துதல் ஆகிய பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று மாநில வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி மன்றக் குழுத் தலைவர் டத்தோ முகமட் ஜாஃப்னி முகமட் ஷுகோர் தெரிவித்துள்ளார்.
“அடுத்த ஆண்டுக்கான வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்காக ஏற்கனவே RM48 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நேற்று (செப்டம்பர் 30) வழக்கமான 10மி.மீ அளவை விட மிக அதிகமாக, சில இடங்களில் 60மி.மீ முதல் 100மி.மீ வரை கனமழை கொட்டித் தீர்த்ததால் வெள்ள நீர் ஜோகூர் நீரிணைக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே நிலமையைச் சமாளிக்க மேலும் RM30 மில்லியன் கூடுதல் நிதி தேவைப்படுவதாக” ஜோகூர் வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி மன்றக் குழுத் தலைவர், டத்தோ முகமட் ஜாஃப்னி முகமட் ஷுகோர் தெரிவித்தார்.
கனமழை மற்றும் வெள்ள அபாயக் எச்சரிக்கைகளை ‘ஜோகூர் பாரு ஒருங்கிணைந்த செயல்பாட்டு கட்டளை மைய’ அமைப்பின் மூலம் நேரடியாக நகர்ப்புற மக்களின் கைபேசிகளுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும் புதிய முறை பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
அதேவேளையில், தற்காலிக நீர் தேக்கக் குளங்கள் மற்றும் வடிகால் அமைப்புகள் தொடர்பான அரசு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத வீட்டுவசதி மேம்பாட்டாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இஸ்கந்தர் புத்திரியில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்திய ஒரு மேம்பாட்டுத் திட்டத்திற்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

















