தாவாவ்:
சபா, லாஹாட் டத்து பகுதியில் ரொட்டி சேனாய் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த 36 வயதுப் பெண்ணைக் கொள்ளையடித்து, பாலியல் அத்துமீறல் புரிந்து படுகொலை செய்த 37 வயது நபருக்கு 35 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதித்து தாவாவ் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
குற்றவாளியான முகமட் ரிட்சுவான் அப்துல் அகமட் சைனி லோகன் குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, நீதித்துறை ஆணையர் ஸ்டீவ் ரிடிகோஸ் இத்தண்டனையை விதித்தார்.
“பாதிக்கப்பட்ட பெண் பிரசவித்து 6 மாதங்களே ஆன நிலையில், குடும்பத்திற்கு உதவ வேலைக்குச் சென்ற இடத்தில் இக்கொடூரம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் மிகுந்த இரக்கமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளதால் மரண தண்டனை அல்லது அதிகபட்சமாக 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று அரசுத் துணை வழக்கறிஞர் நூர் நிஸ்லா அப்ட் லத்தீஃப் கூறினார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் 14 அன்று காலை, லாஹாட் டத்து கம்போங் பிசாங் பகுதியில் உள்ள புதர் நிலத்தில் சிர்லின் சாலே என்ற பெண் அரை ஆடையுடன் சடலமாக மீட்கப்பட்டார். அவர் வேலைக்கு வராததால் தேடிச் சென்ற குடும்பத்தினர் அவரது உடலைக் கண்டுபிடித்தனர்.
குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வழக்கறிஞர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அவருக்கு 35 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டது. இத்தண்டனை அவர் கைதான 2024 நவம்பர் 17 முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.

















