கோலாலம்பூர்:
கோலாலம்பூர் பகுதியில் Facebook சமூக வலைத்தளத்தில் விளம்பரம் செய்யப்பட்ட போலி ஆன்லைன் கடன் விளம்பரம் ஒன்றை நம்பி, 37 வயது பெண் மருத்துவர் ஒருவர் 33,500 மலேசிய ரிங்கிட் பணத்தை இழந்து ஏமாற்றப்பட்டுள்ளார்.
ஆன்லைனில் கடன் பெற விரும்பிய குறித்த மருத்துவர், ஃபேஸ்புக் விளம்பரம் மூலமாக ‘ஆடம் வோங்’ (Adam Wong) என்பவருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.
கடன் வழங்குவதற்கான நடைமுறைக்கட்டணம் எனக் கூறப்பட்டதை நம்பிய அவர், 4 வெவ்வேறு வங்கிச் கணக்குகளுக்கு 5 தவணைகளாக மொத்தம் RM33,500 பணத்தை அனுப்பியுள்ளார்.
மீண்டும் கூடுதல் பணம் கோரப்பட்டதால் சந்தேகமடைந்த மருத்துவர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கடந்த அக்டோபர் 02-ஆம் திகதி பிரிக்ஃபீல்ட்ஸ் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மலேசியக் குற்றவியல் சட்டப் பிரிவு 420-இன் (Section 420 Penal Code – ஏமாற்றுதல்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தொடர்புடைய 4 வங்கிச் கணக்குகள் மற்றும் சந்தேகநபரைக் கண்டறியும் தீவிர விசாரணைகளைப் போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.

















