கோலாலம்பூர்:
ஆவண மோசடி விவகாரம் தொடர்பில் கடந்த ஆண்டு அனைத்துலக கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா (FIFA) விதித்த 12 மாத காலத் தடையை எதிர்கொண்ட 7 கால்பந்து வீரர்களும், நேற்று நவம்பர் 1 முதல் மீண்டும் கால்பந்து நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய கால்பந்து லீக் (MFL) வெளியிட்டதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
இதுகுறித்து மலேசிய கால்பந்து சங்கத் தலைவர் டத்தோ அப்துல் கானி ஹசான் கூறுகையில், சம்பந்தப்பட்ட 7 வீரர்களும் மலேசியக் குடிமக்கள் என்பது புதிதான தகவல் அல்ல என்றும், கடந்த ஏப்ரல் மாதம் மலேசிய லீக் கிளப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற வட்டமேசை விவாதத்தின்போதே இது தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
அந்த 7 வீரர்கள் Gabriel Felipe Arrocha, Facundo Garces, Rodrigo Holgado, Imanol Machuca, Joao Figueiredo, Jon Irazabal Iraurgui dan Hector Hevel ஆவர்.
தடை காலம் முடிவடைந்துள்ளதால், அவர்கள் தத்தமது கிளப்புகளுடன் மீண்டும் பயிற்சியிலும் உள்நாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இராசபால், ஃபிகியூரிடோ, ஹெவெல் மற்றும் பல்மெரோ ஆகிய 4 வீரர்களும் ஜொகூர் டாருல் தக்சிம் (JDT) அணிக்காக மீண்டும் களமிறங்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
அதேவேளை, ஹோல்காடோ புருனே டிபிஎம்எம் எஃப்சி அணியில் இணையக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், கிளப் அணிகளுக்காக விளையாடுவதற்கான அனுமதியையும், மலேசிய தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான தகுதியையும் ஒன்றாகக் கருத முடியாது என்றும், தேசிய அணிக்கான தகுதி தொடர்பில் ஃபிஃபாவின் விதிமுறைகள் மற்றும் முடிவுகளே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















