(ரெ. மாலினி)
மலாக்கா:
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் ஆட்சியில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காகப் பல்வேறு சிறப்பு நிதித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டுள்ளதை மறுக்க முடியாது என்று பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் தெரிவித்துள்ளார்.

இந்திய சமுதாயத்தின் பொருளாதார முன்னேற்றம், கல்வி, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் சமூக நலன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, இந்தியத் தொழில்முனைவோருக்கான நிதியுதவிகள், சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான வாய்ப்புகள், இளைஞர்களின் முன்னேற்றம் உள்ளிட்ட துறைகளில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, இந்திய சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல், மலேசியாவில் வாழும் அனைத்து இன மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் சண்முகம் மூக்கன் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியுடன் இந்திய சமுதாயத்தின் முன்னேற்றமும் இணைந்து பயணிக்க வேண்டியது அவசியமாகும். அரசாங்கத்தின் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளையும் உதவித் திட்டங்களையும் சமுதாய மக்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் பொருளாதார ரீதியாக மேலும் முன்னேற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், மலேசிய இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிப் பயணம் தடையின்றித் தொடர வேண்டுமெனில், அரசியல் நிலைத்தன்மையும் சிறந்த நிர்வாகமும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
எனவே, எதிர்வரும் மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் *அசஹான் (Asahan) மற்றும் காடெக் (Gadek)* சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் இரண்டு இந்திய வேட்பாளர்களுக்கும் இந்திய வாக்காளர்கள் தங்களது ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டும் என்று பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் கேட்டுக்கொண்டார்.





















