பெட்டாலிங் ஜெயா,
வரும் 16ஆவது பொதுத் தேர்தலில் பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்புவதாக முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ நஸ்ரி அஸிஸ் தெரிவித்துள்ளார். அந்தத் தொகுதி பாரிசான் நேஷனலின் (BN) பாரம்பரியக் கோட்டை என்றும், அதில் போட்டியிட பெரிக்காத்தான் நேஷனல் (PN) விரும்பினால் வேறு தொகுதியைத் தேடிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
2004ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை நான்கு தவணைகள் பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய நஸ்ரி, 15ஆவது பொதுத் தேர்தலில் இளம் தலைவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் போட்டியிடாமல் ஒதுங்கியிருந்தார்.
2023 பிப்ரவரி முதல் 2025 பிப்ரவரி வரை அமெரிக்காவுக்கான மலேசியத் தூதராகப் பணியாற்றிய அவர், தற்போது மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார்.
“அது பாரிசான் நேஷனலின் தொகுதி. வேறு தொகுதியைத் தேடிக்கொள்ளுங்கள். நான் இன்னும் அம்னோ தொகுதித் தலைவராக இருக்கிறேன். மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்” என அவர் கூறியுள்ளார்.
எனினும், பாடாங் ரெங்காஸ் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது அம்னோ கட்சித் தலைமையின் ஒப்புதலைப் பொறுத்தே அமையும் என்றும் நஸ்ரி அஸிஸ் தெரிவித்துள்ளார்.




















