ஈப்போ,
பேராக் மாநிலம், கம்பாரில் போக்குவரத்து சமிக்ஞையின் சிவப்பு விளக்கை மீறிச் சென்றதாக நம்பப்படும் டிரெய்லர் லாரி ஒன்று, மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளி அதன் ஓட்டுநரான 19 வயது கல்லூரி மாணவரைச் சாலையில் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில், ஈப்போ – கோலாலம்பூர் சாலையின் 34ஆவது கிலோமீட்டரில், பேரங்காடி ஒன்றின் அருகிலுள்ள போக்குவரத்து சமிக்ஞை சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்து தொடர்பான வாகனக் கேமரா காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
அந்தக் காணொளியில், சாலைச் சந்திப்பைக் கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள் மீது டிரெய்லர் லாரி மோதுவதும், அதன் ஓட்டுநர் கீழே விழுந்து சாலையில் இழுத்துச் செல்லப்படுவதும் பதிவாகியுள்ளது.
விபத்தைக் கண்ட பொதுமக்கள் உடனடியாகத் தங்கள் வாகனங்களை நிறுத்தி, காயமடைந்த மாணவருக்கு உதவியதுடன் அவரை அமைதிப்படுத்த முயன்றனர்.
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்!
இந்த விபத்தில் 19 வயது கல்லூரி மாணவர் உயிர் தப்பியபோதிலும், அவரது இடது காலில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கம்பார் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிண்டெண்டன் முகமட் நஸ்ரி டாவுட் தெரிவித்தார்.
48 வயதுடைய ஆடவர் ஓட்டிச் சென்ற டிரெய்லர் லாரி, கம்பாரிலிருந்து ஈப்போ நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது சிவப்பு விளக்கை மீறியதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.
அப்போது இடதுபுறத்திலிருந்து வந்த மாணவரின் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மீது அந்த லாரி மோதியதாக அவர் விளக்கமளித்தார்.
இந்த மோதலில் மாணவரின் காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதுடன், டிரெய்லர் லாரி ஓட்டுநருக்கும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில் 48 வயது லாரி ஓட்டுநர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கான அறிகுறிகள் கண்டறியப்படவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பாக 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 43ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறியவும், விசாரணை அறிக்கையை முழுமைப்படுத்தவும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாக முகமட் நஸ்ரி தெரிவித்தார்.























