(எஸ். லிங்கேஸ்வரன்) ஈப்போ,
மக்கள் நலன், பொருளாதார வளர்ச்சி, கல்வி, வெள்ளத் தடுப்பு, இந்தியர் நலன் எனப் பல்வேறு திட்டங்களுக்கு முக்கியத்துவம்!
37 திட்டங்கள் மூலம் ரிம260.5 மில்லியன் மதிப்பிலான நேரடி உதவிகள்; இந்தியர் உள்ளிட்ட சமூகங்களின் நலனுக்கு ரிம6.5 மில்லியன் ஒதுக்கீடு!
பேராக் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துவதோடு, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, அனைத்து இன மக்களுக்கும் சமமான நலன்களையும் வாய்ப்புகளையும் வழங்கும் நோக்கில், 2027ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாராணி முகமட் நேற்று மாநில சட்டமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்தார்.
ரிம1.693 பில்லியன் மதிப்பிலான இந்தப் பட்ஜெட், பேராக் மாநில வரலாற்றிலேயே இதுவரை முன்மொழியப்பட்டுள்ள மிகப்பெரிய பட்ஜெட்டாகும். இதில் ரிம1.1 பில்லியன் நிர்வாகச் செலவுகளுக்கும், ரிம593 மில்லியன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு ரிம25 மில்லியன் அல்லது 4.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. மாநிலத்தின் மொத்த வருவாய் மற்றும் மேம்பாட்டு வரவுகள் ரிம1.565 பில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘பேராக் செழிக்கட்டும், மக்கள் நலமுடன் வாழட்டும்; வருவாயின் பலனை மக்கள் உணரட்டும், நம்பிக்கை கட்டியெழுப்பப்படட்டும்’ (Perak Makmur, Rakyat Sejahtera: Hasil Dirasa, Keyakinan Dibina) என்ற கருப்பொருளில் இந்தப் பட்ஜெட் அமைந்துள்ளது.
மாநிலத்தின் நீண்டகால வளர்ச்சித் திட்டமான பேராக் செழிப்பு 2030 (Perak Sejahtera 2030) திட்டத்தின் தொடர்ச்சியாக இந்தப் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.
ஐந்து முக்கிய முன்னுரிமைகள்
2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஐந்து முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
முதலாவதாக, மக்களின் நலவாழ்வை மேம்படுத்துதல்; இரண்டாவதாக, மாநில முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களின் நிர்வாகத்தையும் செயலாக்கத்தையும் வலுப்படுத்துதல்; மூன்றாவதாக, மனிதவள மேம்பாடு மற்றும் இளைஞர்களின் முன்னேற்றம்; நான்காவதாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு; ஐந்தாவதாக, உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
இந்த ஐந்து அம்சங்களின் வழியாகப் பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே மாநில அரசின் நோக்கமாகும்.
மக்களின் வாழ்க்கைச் செலவினச் சுமையைக் குறைக்க ரிம260.5 மில்லியன்!
பொருளாதார வளர்ச்சியுடன் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவினச் சுமையையும் குறைப்பதற்கு மாநில அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது.
இதற்காக ‘Sentuhan Perak Sejahtera’ எனும் திட்டத்தின் கீழ் ஐந்து பிரிவுகளாக 37 நேரடி உதவித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரிம260.5 மில்லியனாகும்.
குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களைச் சந்தை விலையைக் காட்டிலும் 10 முதல் 30 விழுக்காடு வரை குறைந்த விலையில் விற்பனை செய்யும் Pasar Sejahtera Rakyat திட்டத்திற்கு ரிம4 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 21,000 பயனாளிகளுக்கு உதவும் வகையில் Kad Perak Sejahtera திட்டத்திற்கு ரிம26 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்கள் அடங்கிய உதவிப் பெட்டிகளை வழங்கும் திட்டத்திற்கு ரிம6.2 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், பேராக் செழிப்பு பேருந்துச் சேவையை விரிவுபடுத்த ரிம4.4 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹுலு பேராக் பகுதியில் புதிதாக மூன்று வழித்தடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, மொத்த வழித்தடங்களின் எண்ணிக்கை 16ஆக உயர்த்தப்படும்.
இந்தியர் உள்ளிட்ட சமூகங்களின் நலனுக்கு ரிம6.5 மில்லியன்!
பல்லின மக்கள் வாழும் பேராக் மாநிலத்தில் இன நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் வகையில், இந்தியர் உள்ளிட்ட முஸ்லிம் அல்லாத சமூகங்களின் நலன்களுக்கும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், முஸ்லிம் அல்லாதோர் விவகாரங்களுக்கான (HEBI) ஒதுக்கீடு ரிம13 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதில் சீன சமூகத்தினர் மற்றும் சீனப் புதுக்கிராமங்களுக்காக ரிம6.5 மில்லியனும், இந்திய சமூகத்தினர், இந்தியக் கிராமங்கள் மற்றும் இதர இனத்தவர்களுக்காக ரிம6.5 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் தேசிய ஒருமைப்பாட்டுத் திட்டங்களுக்கு ரிம250,000 ஒதுக்கப்பட்டுள்ளது.
சமூக நலன், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடும் அரசு சாரா அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கு ரிம1 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளத் தடுப்புக்கும் சாலை மேம்பாட்டுக்கும் கூடுதல் நிதி!
பேராக் மாநிலத்தில் அண்மைக் காலமாக ஏற்பட்டுவரும் வெள்ளப் பாதிப்புகள் மக்களின் வாழ்வாதாரத்தையும் உடைமைகளையும் பாதித்து வரும் நிலையில், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டில் நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறையின் நிர்வாகச் செலவுகளுக்கு ரிம116.8 மில்லியனும், மேம்பாட்டுச் செலவுகளுக்கு ரிம15 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்காக ரிம8.5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சுங்கை செபத்தாங் ஆற்றுப்படுகை வெள்ளத் தடுப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு ரிம94.2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதேவேளையில், மாநிலம் முழுவதும் 28,890 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளைப் பராமரிப்பதற்காக மத்திய அரசிடமிருந்து ரிம635.5 மில்லியன் MARRIS நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுப்பணித் துறைக்கு ரிம258.15 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரிம110.15 மில்லியன் நிர்வாகச் செலவுகளுக்கும், ரிம148 மில்லியன் மேம்பாட்டுப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படும்.
கல்வி, இளைஞர் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம்!
மாணவர்களின் கல்வி முன்னேற்றம், உயர்கல்வி வாய்ப்புகள், திறன் பயிற்சி மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துவதும் இந்தப் பட்ஜெட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
எஸ்பிஎம் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 937ஆக இருந்த நிலையில், 2025ஆம் ஆண்டில் 1,008ஆக அதிகரித்துள்ளது.
அதேபோன்று, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ரிம7.21 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் பேராக் மாநிலத்திலுள்ள ஐந்து பல்கலைக்கழக வளாகங்களில் பயிலும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த தகுதியுடைய மாணவர்களுக்கு மாதந்தோறும் ரிம200 உணவு உதவி வழங்கும் Mahasiswa Perak Sejahtera 2030 திட்டத்திற்கு ரிம2.2 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், முக்கியத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கும் Tuisyen Cikgu Saarani திட்டத்திற்கு ரிம3.91 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இளைஞர் மேம்பாட்டுத் திட்டங்கள், இளைஞர் சட்டமன்றம், விளையாட்டு, கலை மற்றும் கலாசாரத் துறைகளுக்கும் பல்வேறு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
குடும்ப நலன், வீடமைப்பு உதவிகளுக்கு நிதி!
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில், சமூக நலத்துறையின் பல்வேறு உதவித் திட்டங்களுக்காக ரிம47.7 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் ரிம37 மில்லியன் மாநிலத்தின் பொதுநல உதவித் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், வசதி குறைந்த குடும்பங்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்கும், அவர்களின் வீடுகளைப் பழுதுபார்ப்பதற்கும் Sayangi Rumahku திட்டத்திற்கு ரிம3 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்கள் குடியிருப்புத் திட்டங்கள் மற்றும் பொது வீடமைப்புத் திட்டங்களின் பராமரிப்புப் பணிகளுக்கு ரிம2.5 மில்லியனும், தகுதியுடைய மக்களுக்கு வீடு வாங்குவதற்கான கடனுதவி வழங்கும் Perakku Prihatin திட்டத்திற்கு ரிம3 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் விவசாயத்திற்கும் முன்னுரிமை!
பேராக் மாநிலத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மாநில வனத்துறையின் நிர்வாகச் செலவுகளுக்கு ரிம51.26 மில்லியனும், மேம்பாட்டுச் செலவுகளுக்கு ரிம10 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், விவசாயத் துறையின் நிர்வாகச் செலவுகளுக்கு ரிம33.19 மில்லியனும், மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரிம8 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மீன்பிடித் தொழில், மீன் வளர்ப்பு மற்றும் உள்ளூர் உணவு உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் தனித்தனி நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
பேராக் பொருளாதாரம் 5.7 விழுக்காடு வளர்ச்சி!
இதனிடையே, பேராக் மாநிலத்தின் பொருளாதாரம் 2025ஆம் ஆண்டில் 5.7 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளதாக டத்தோஸ்ரீ சாராணி தெரிவித்தார்.
மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரிம91.5 பில்லியனை எட்டியுள்ளதுடன், தனிநபர் வருமானம் ரிம41,978ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, உற்பத்தித் துறை 15.2 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இத்துறை மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21.1 விழுக்காடு பங்களிப்பை வழங்கியுள்ளது.
2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் பேராக் மாநிலத்தில் ரிம3.817 பில்லியன் மதிப்பிலான முதலீடுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 4,441 வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், 2026ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி நிலவரப்படி மாநில வருவாய் ரிம1.006 பில்லியனாக இருந்த நிலையில், நவம்பர் 23ஆம் தேதி நிலவரப்படி ரிம1.244 பில்லியனாக உயர்ந்துள்ளது.
2026ஆம் ஆண்டின் இறுதியில் மாநிலம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக நிதி உபரியைப் பதிவு செய்யும் என மாநில அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மொத்தத்தில், 2027ஆம் ஆண்டுக்கான பேராக் மாநில பட்ஜெட், பொருளாதார வளர்ச்சி, அடிப்படை வசதிகள், கல்வி, சமூக நலன், இந்தியர் உள்ளிட்ட அனைத்து இன மக்களின் நலன் மற்றும் எதிர்காலத் தலைமுறையின் முன்னேற்றம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.
மக்களின் வாழ்க்கையில் இந்த நிதி ஒதுக்கீடுகள் எந்த அளவிற்கு நேரடிப் பலன்களை ஏற்படுத்துகின்றன என்பதே இந்தப் பட்ஜெட்டின் உண்மையான வெற்றியைத் தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.























