புக்கிட் பிந்தாங்கில் பிரமாண்ட புத்தாண்டு அணிவகுப்பு! ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரள்வார்கள் என எதிர்பார்ப்பு – ஙா கோர் மிங்

கோலாலம்பூர், 

மலேசியாவின் முதல் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வென்ற டான்ஸ்ரீ மிச்செல் யோ, பூப்பந்துப் போட்டியின் ஜாம்பவான் டத்தோ வீரா லீ சோங் வெய் ஆகியோர் வரும் 2027 ஜனவரி 2ஆம் தேதி புக்கிட் பிந்தாங்கில் நடைபெறவுள்ள ‘I LITE U 2.0’ புத்தாண்டு அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளனர்.

புக்கிட் பிந்தாங்கிலுள்ள பெவிலியன் கோலாலம்பூர் முன்புறத்தில் மாலை வேளையில் நடைபெறவுள்ள இந்தப் பிரமாண்ட அணிவகுப்பில் நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஐக்கிய நாட்டுச் சபையின் தலைமைச் செயலாளரின் சாலைப் பாதுகாப்புக்கான சிறப்புத் தூதர் ஜீன் டோட்டைச் சந்தித்த பின்னர், வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் இதனை அறிவித்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கியே நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற உலகளாவிய கழிவில்லா மாநாட்டில் இருவரும் சந்தித்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, சிறந்த நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் கட்டட வடிவமைப்புகளின் வாயிலாகச் சாலை விபத்துகளைக் குறைப்பது, சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

மிச்செல் யோவின் கணவரான ஜீன் டோட், பெராரி ஃபார்முலா ஒன் அணியின் முன்னாள் தலைவரும் அனைத்துலக மோட்டார் வாகன சம்மேளனத்தின் (FIA) முன்னாள் தலைவரும் ஆவார்.

பிரதமர் அன்வார் தொடக்கி வைப்பார்

‘மலேசியாவின் 70 ஆண்டுகால மகத்துவம்’ எனும் கருப்பொருளில் நடைபெறவுள்ள இந்த அணிவகுப்பு, நாட்டின் சாதனைகளைக் கொண்டாடுவதோடு, மலேசிய வருகை ஆண்டு 2026–2027 பிரச்சாரத்தையும் வலுப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரபல பாடகி டத்தோஸ்ரீ சித்தி நூர்ஹலிசா, ஸ்குவாஷ் விளையாட்டின் ஜாம்பவான் டத்தோ நிக்கோல் ஆன் டேவிட், உயர்மாடிக் கட்டடப் படிக்கட்டு ஓட்ட வீரர் சோ வை சிங் ஆகியோரும் இந்த அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளனர்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ‘I LITE U 2.0’ நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார் என்று ஙா கோர் மிங் தெரிவித்தார்.

ஒரு நாடாக மலேசியா அடைந்துள்ள சாதனைகளை அனைத்து மலேசியர்களும் ஒன்றிணைந்து கொண்டாட வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

அதேவேளையில், மலேசியாவின் சிறப்புகளை உலக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் 2027ஆம் ஆண்டை நோக்கிய சுற்றுலாப் பிரச்சாரத்தை வலுப்படுத்துவதற்கும் இந்த அணிவகுப்பு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று அவர் கூறினார்.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

இந்தப் பிரமாண்ட அணிவகுப்பைக் காண ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவின் பல்லினக் கலாசாரச் சிறப்புகளை உலக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்நிகழ்ச்சி தொலைக்காட்சியிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இவ்வாண்டின் தொடக்கத்தில் முதன்முறையாக நடைபெற்ற ‘I LITE U’ நிகழ்ச்சி இணையத் தளங்களில் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பதிவு செய்திருந்தது. இது நாட்டின் சுற்றுலாப் பிரச்சாரத்திற்கு மேலும் வலுசேர்த்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, பல்வேறு அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து நாட்டின் பிரபலங்களையும் அனைத்துலக அரங்கில் சாதனை படைத்த மலேசியர்களையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு மேற்கொள்ளவுள்ளது.

மலேசியாவின் தனித்துவமிக்க பல்லினக் கலாசாரத்தையும் உலக அரங்கில் சாதிக்க வேண்டும் என்ற மலேசியர்களின் மன உறுதியையும் வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமையும் என்றார் அவர்.

அனைத்து வயதினரும் தங்களது குடும்பத்தினர், நண்பர்களுடன் புக்கிட் பிந்தாங்கிற்கு வருகை புரிந்து, இந்தப் பிரமாண்ட அணிவகுப்பைக் கண்டுகளிப்பதோடு புத்தாண்டையும் ஒன்றிணைந்து வரவேற்குமாறு ஙா கோர் மிங் அழைப்பு விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here