உலகளாவிய தமிழ் தொழில் அதிபர்கள், நிபுணர்கள், மலேசியாவில் முதலீடு செய்வதற்கு பேரார்வம் காட்டியுள்ளனர் என்று எஸ்.பி.கேர் குழுமத்தின் தலைவர் டாக்டர் சத்தியபிரகாஷ் நடராஜன் கூறினார்.
சுவிட்சர்லாந்து டாவோஸ் மாநகரில் கடந்த ஜூன் 7ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை ‘தி ரைய்ஸ்’ எனப்படும் எழுமின் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற 13ஆவது உலகத் தமிழ் தொழில் முனைவோர், திறனாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பிகேஆர் தேசிய துணைத் தலைமைச் செயலாளருமான அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து 44 நாடுகளைச் சேர்ந்த 450 பேராளர்கள் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் பல்வேறு நிபுணத்துவ தொழில்துறையைச் சேர்ந்தவர்களாவர்.
மடானி அரசாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உலகளாவிய இந்தியர்கள் குறிப்பாக வணிகத்தில் வெற்றி பெற்ற தமிழர்கள் மலேசியாவில் முதலீடு செய்வதற்கு முன்வரவேண்டும் என்று விரும்புகிறார்; எதிர்பார்க்கிறார் என்று இந்த மாநாட்டில் தாம் மிகத் தெளிவாக எடுத்துரைத்ததாக டாக்டர் சத்தியபிரகாஷ் கூறினார்.
இதன்பின்னர், இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பல தமிழர் தொழில் அதிபர்கள் மருத்துவம், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் தெரிவித்தது மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இம்மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக சரவணன் சின்னப்பன் செயல்பட்ட நிலையில், டாக்டர் சத்தியபிரகாஷ் தலைமையில் 30 மலேசியப் பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர். சைபர் ஜெயா பல்கலைக்கழக வேந்தர் டான்ஸ்ரீ பாலன், பிரைஃவ் இன்டர்நேஷனல் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் சுரேன் கந்தா ஆகியோரும் மலேசியப் பேராளர்களில் அடங்குவர்.
மலேசியாவில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் தெரிவித்துள்ள உலகத் தமிழர் தொழில் முனைவோருக்கு மிகச் சரியான தொழில்துறைகள் அடையாளம் காணப்பட்டு முதலீடு செய்வதற்குரிய முன்னெடுப்புகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்ட டாக்டர் சத்தியபிரகாஷ் இது குறித்து நிதி அமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வாருக்கு துல்லியமாக விளக்கமளிக்கப்படும் என்று சொன்னார்.
இந்த மாநாட்டில் மிகப் பெரிய அளவில் மலேசியத் தமிழர் தொழில்முனைவோர்கள் முதலீடு செய்வதற்குரிய துறைகளும் வாய்ப்புகளும் அடையாளம் காணப்பட்டன.
இதனிடையே, சிறந்த தமிழ் வணிக குழுமத்திற்கான விருது எஸ்.பி.கேர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அதனை டாக்டர் சத்தியபிரகாஷ் பெற்றுக் கொண்டார். இந்த மாநாட்டின் அதிகாரப்பூர்வ நாளிதழாக மக்கள் ஓசை இடம் பெற்றது.





















