கோலப்பிலா:
தன் மனைவியை காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், குற்றத்தை ஒப்புக்கொண்ட 46 வயது ஆடவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கால்நடை வளர்ப்பாளரான இஸ்மாயில் இப்ராஹிம் என்பவருக்கு எதிராக, இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 10) மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சைபுல் சயோதி முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) இரவு 9.10 மணியளவில் Gemencheh யில் உள்ள துரித உணவு உணவகத்திற்கு அருகில், தனது 47 வயது மனைவியான ஆசிரியைக்கு எதிராக இக்குற்றத்தைச் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
வழக்கின் உண்மைகளின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் மனைவியை அணுகியபோது, அவர் திரெங்கானுவில் உள்ள தனது சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக பேருந்துக்காகக் காத்திருந்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, இஸ்மாயில் கழுத்தை நெரித்ததுடன், மனைவியின் தலையை அருகிலிருந்த சுவரில் பலமுறை அடித்தார், அத்தோடு அவரின் முகத்திலும் குத்தினார்.
பாதிக்கப்பட்ட பெண் பின்னர் Gemencheh சுகாதார கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவர் நெற்றியில் ஏற்பட்ட காயத்திற்கு இரண்டு தையல்கள் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.




















