கோலாலம்பூர்:
ஜோகூரில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) மோசமான அளவிலான எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிகாமாட், குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு ஆகிய பகுதிகள் இந்த வானிலையால் பாதிக்கப்படும் என்று மெட்மலேசியா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் பகாங்கில் உள்ள குவாந்தான், பெக்கான் மற்றும் ரொம்பின் மற்றும் ஜோகூரில் (பத்து பகாட் மற்றும் பொந்தியான்) ஆகிய இடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து மழை பெய்யும் என்ற எச்சரிக்கை நிலை அறிவிப்பையும் அது வெளியிட்டது.
இதற்கிடையில், தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் (NADMA) தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள நாட்டின் பேரிடர் நிலை குறித்த சமீபத்திய அறிக்கையின் அடிப்படையில், பெர்லிஸில் உள்ள சுங்கை ஆராவ் மற்றும் கிளந்தானின் பாசீர் மாஸில் உள்ள சுங்கை கிளந்தான் ஆகியவற்றில் நீர்மட்டம் ஆபத்தான நிலையில் உள்ளது.
மேலும் வெள்ளம், நிலச்சரிவு அல்லது சேதம் காரணமாக மொத்தம் 19 சாலைகள் இன்னும் மூடப்பட்டுள்ளன என்றும் அவ்வறிக்கையில் அது தெரிவித்துள்ளது.









