பச்சோக்:
போலீசாரின் சோதனை நடவடிக்கையின் போது, தான் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஆற்றில் குதித்த 39 வயது நபர் பெங்கலன் பேட்டை படகுத்துறையில் விழுந்ததில், நீரில் மூழ்கி இறந்தார்.
நேற்று மாலை 4.30 மணியளவில் குறித்த படகுத்துறை அருகே போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினர் நடத்திய நடவடிக்கையின் போது, அந்த நபர் ஆற்றில் குதித்ததாகக் கூறப்படுகிறது என்று பச்சோக் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் இஸ்மாயில் ஜமாலுடின் கூறினார்.
அவர் குதித்ததாக அறிவிக்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் நேற்று மாலை சுமார் 7 மணியளவில் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினரால் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது என அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குறித்த நபரின் சடலம் அவரது உறவினர் ஒருவரால் அடையாளம் காட்டப்பட்டதை அடுத்து, பிரேத பரிசோதனைக்காக சடலம் ராஜா பெரெம்புவான் ஜைனாப் II மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக முகமட் இஸ்மாயில் கூறினார்.
சந்தேகநபருக்கு போதைப்பொருள் தொடர்பான ஆறு முந்தைய குற்றப்பதிவுகள் இருப்பதாகவும், போலீசார் இந்த வழக்கை திடீர் மரணம் என வகைப்படுத்தியதாகவும் அவர் மேலும் கூறினார்.




















