புத்ராஜெயா:
பேராக்கின் பீடோரில் உள்ள தற்காலிக குடிநுழைவு தடுப்பு முகாமிலிருந்து தப்பித்து ஓடிய மொத்தம் 131 கைதிகளில், நான்கு பேர் இன்று மதியம் வெற்றிகரமாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாலை 4 மணியளவில் காவல்துறையினருடன் குடிநுழைவுத்துறை இணைந்து நடத்திய நடவடிக்கையின் மூலம் சம்பந்தப்பட்ட நான்கு வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டதாக மலேசிய குடிநுழைவுத் துறையின் (JIM) இயக்குநர் ஜெனரல் டத்தோ ரஸ்லின் ஜூசோ கூறினார்.
தப்பியோடிய கைதிகள் உட்பட மொத்தம் 556 வெளிநாட்டு பிரஜைகள் குறித்த தடுப்புக் முகாமிலுள்ள ஐந்து தொகுதிகளில் மூன்றில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர் என்று அவர் மேலும் கூறினார்.
தப்பியோடியவர்களில் 115 ரோஹிங்கியா இனத்தவர், 15 மியன்மார் பிரஜைகள் மற்றும் ஒரு வங்காளாதேசச் சேர்ந்தவர்கள் என்று அவர் JIM தலைமையகத்தில் இன்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், சம்பவத்தின் போது மலேசிய தன்னார்வத் துறை (ரேலா) உறுப்பினர்கள் இருவர் காயமடைந்ததாகவும் மேலும் பல அதிகாரிகள் சட்டவிரோத குடியேறிகள் வீசிய கற்களால் தாக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தப்பியவர்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் 387 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளதாக ரஸ்லின் கூறினார்.
“அவர்கள் அதிக தூரம் சென்றிருக்க வாய்ப்பில்லை என்றும், மாவட்டத்தில் உள்ள பகுதிக்குள் பதுங்கி இருப்பதாக நாங்கள் இன்னும் கருதுகிறோம் என்றும், தப்பியவர்க்ள இன்று இரவு மற்றும் சிறிய குழுக்களாக பிரிந்து செல்ல திட்டமிட்டிருக்கலாம் என்றும் கூறினார்.
எனவே தற்போது தங்களது அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் பீடோரைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்,” என்று அவர் சொன்னார் .









