20 கி.மீ போலீஸ் துரத்தலின் பின் கைது செய்யப்பட்ட ஆடவருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுக்கள்!

கோலாலம்பூர்:

டந்த மாதம் பினாங்கில் 20 கிலோமீட்டர் தூரம் துரத்தியும் காவல்துறையினரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்று, 12 வாகனங்களைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படும் 29 வயது காபி கடை ஊழியர் மீது நேற்று 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்ட எஸ். பிரசாந்த் (29) என்ற அந்த நபர், இன்று ஜார்ஜ் டவுனில் உள்ள இரண்டு தனித்தனி மஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டார். மஜிஸ்திரேட்டுகள் நத்ரதுன் நைம் முகமட் சைடி மற்றும் நூர் ஃபத்ரினா ஜுல்கைரி ஆகியோரின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்து விசாரணை கோரினார்.

அவருக்கு எதிராக 12 வாகனங்களைச் சேதப்படுத்தியதற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 427-ன் கீழ் 12 குற்றச்சாட்டுகளும், போலீஸ் அதிகாரியின் கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததற்காக பிரிவு 186-ன் கீழ் ஒரு குற்றச்சாட்டு, சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-ன் கீழ் ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியதற்காக ஒரு குற்றச்சாட்டு என மொத்தம் 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி காலை 9 மணியளவில் ‘கிரீன் லேன்’ பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற வாகனத்தை நிறுத்த போலீஸார் முயன்றனர். ஆனால், பிரசாந்த் வாகனத்தை நிறுத்தாமல் சுமார் 20 கி.மீ தூரம் அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். இந்தத் துரத்தலின் போது ஜாலான் புர்மா, சுங்கை பினாங் உள்ளிட்ட பகுதிகளில் 12 வாகனங்கள் மீது மோதி சேதத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

வழக்கின் அடுத்தகட்ட விசாரணை (Mention) ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here