பங்குனி உத்திரத்தில் முருகப்பெருமானை வழிபடும் முறை

தமிழ் மாதங்களில் கடைசி 12வது மாதமாக வரக்கூடிய பங்குனியில், 12வது நட்சத்திரமாக வரக்கூடிய உத்திர நட்சத்திரத்தில், 12 கைகளை உடைய முருகப்பெருமானுக்கு பூஜைகள் செய்வது தான் பங்குனி உத்திரத்தின் பெருஞ்சிறப்பு! இந்த வருடம் 2025இல் பங்குனி உத்திரம் திங்கட்கிழமை 11ஆம் தேதி வெகுவிமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. பத்தாம் தேதி பகல் 12:24 மணிக்கு ஆரம்பித்து, மறுநாள் பதினோராம் தேதி மாலை 3.10 மணி வரை உத்திர நட்சத்திரம் நீடிக்கிறது. பன்னிரெண்டாம் தேதி பௌர்ணமி வரும்.
இவ்வாண்டு நல்ல சுபயோக பங்குனி உத்திர நாளில், சுப முகூர்த்தமும் கூடி வருகிறது. பங்குனி உத்திரத்தில் பல தெய்வங்களுக்கு திருமண வைபவங்கள் நடைபெற்றுள்ளது. சிவன் பார்வதி, ராமர் சீதை, அரங்கன் ஆண்டாள், முருகன் தெய்வானை என்று வரிசையாக தெய்வத் திருமணங்கள் பங்குனி உத்திரத்தில் நடைபெற்றுள்ளது. அதனால் தான் இந்நாளில் திருமண வாழ்க்கை நல்லபடியாக அமைவதற்கு விரதம் இருந்து வழிபடுவார்கள்.
பங்குனி உத்திரத்தில் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. கோவிலுக்கு சென்று அந்நாளில் முருகனுக்கு நடக்கும் அபிஷேகங்களில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் இருக்கும் தடைகள் அகலும் என்பது நியதி. கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விரதம் இருந்து பங்குனி உத்திர நாளில் முருகனை வழிபடலாம். அதிகாலையிலேயே எழுந்து நீராடி சுத்தபத்தமாக முருகனை பூஜை அறையில் அலங்கரித்துக் கொள்ளுங்கள்.
அன்றைய நாளில் முருகன் சிலை மற்றும் வேல் வைத்திருப்பவர்கள் அதனை சுத்தம் செய்து முதலில் சுத்தமான தண்ணீராலும் பிறகு பன்னீராலும் அபிஷேகம் செய்து பின்னர் பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும். பங்குனி உத்திரத்தில் பாலால் முருகனுக்கு அபிஷேகம் செய்தால், அமைய இருக்கும் மணவாழ்க்கையோ அல்லது ஏற்கனவே அமைந்துள்ள மண வாழ்க்கையோ பிரச்சனைகளில் இருந்தால் அவை நீங்கி சுபமான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. திருமணமாகாதவர்கள், திருமண பந்தத்தில் இருப்பவர்கள் அனைவரும் இந்நாளை தவறவிடாமல் முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட மறக்காதீர்கள்.
மேலும் இந்நாளில் காலை முதல் இரவு வரை விரதம் இருக்க வேண்டும். உணவு எதுவும் சாப்பிடக்கூடாது. இரவில் பால், பழங்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம். திருப்புகழ் பாடுவது இந்நாளின் சிறப்பு பலன்களை கொடுக்கும். முருகனுக்கு நைவேத்தியமாக சர்க்கரை பொங்கலும், தேனும் திணைமாவும் படைக்க வேண்டும். 12 நெய் தீபங்கள் ஏற்றி வைத்து முருகனை மனதார நினைத்து, கற்பூர ஆரத்தி காண்பியுங்கள்.
பங்குனி உத்திரத்தில் பரிகார பூஜைகள் செய்வது நற்பலன்களை கொடுக்கும். காதல் கை கூட வேண்டும் என்று நினைப்பவர்களும் பங்குனி உத்திரத்தில் விரதம் இருந்து முருகனை வழிபடுங்கள்.  திருமண தடை இருப்பவர்களும் பங்குனி உத்திரத்தில் கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்யுங்கள், விரைவில் திருமணம் கைகூடி வரும். பங்குனி உத்தரத்தில் பத்து பேருக்காவது அன்னதானம் செய்யுங்கள், பெரும் புகழ் வந்து சேரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here