ஈப்போ :
கமுந்திங் அருகே வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் மோட்டார் சைக்கிள் மீது விரைவுப்பேருந்து மோதி, தீப்பிடித்ததில் இருபத்தெட்டு பயணிகள் மயிரிழையில் காயமின்றி உயிர்தப்பினர்.
அதே நேரத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிறிய காயங்களுக்கு உள்ளானார் என்றும், அவசர மருத்துவ மீட்பு சேவைகள் (EMRS) பிரிவு அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது என்றும் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமட் கூறினார்.

சம்பவம் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை (மே 29) இரவு 9.16 மணியளவில் தகவல் கிடைத்தது என்றும், இந்தச் சம்பவம் வடக்கு-தெற்கு விரைவுச் சாலையின் வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில் உள்ள KM406 இல் நிகழ்ந்ததாகவும் கூறினார்.
“சறுக்கி விழுந்ததாக நம்பப்படும் மோட்டார் சைக்கிள், பேருந்தால் இழுத்துச் செல்லப்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் விரைவுப் பேருந்து 90% எரிந்து நாசமானது.
“சம்பவத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்,” என்று அவர் மேலும் கூறினார்.




















