புரூசெல்ஸ்,
சமூகப் பாதுகாப்பு நிறுவனம் (பெர்கேசோ – பெல்ஜியம் தேசியத் தொழிலாளர் அலுவலகம்) ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழி சமூகப் பாதுகாப்பு, தொழில்சேவை முறையை மனிதவள அமைச்சு தொடர்ந்து வலுப்படுத்தும் என்று அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் கூறினார்.
இவ்விரு நாடுகளுக்கு இடையிலான வியூக ஒத்துழைப்பானது துறை சார்ந்த அறிவாற்றலைப் பகிர்ந்து கொள்வதற்கும் சேவைத் தரத்தை உயர்த்துவதற்கும் புதிய வாய்ப்புகளைத் திறப்பதற்குரிய களம் தொழில்சேவை, சமூகப் பாதுகாப்பு ஆகிய அம்சங்களில் இன்னும் அதீத கவனம் அமைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக செலுத்தி சேவையை வலுப்படுத்துவதற்கு இப்புதிய வியூக வழிவகுத்திருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
ஒப்பந்தம் பெர்கேசோ, பெல்ஜியம் தேசியத் தொழிலாளர் அலுவலகம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பு உலகளாவிய அளவில் மிகச்சிறந்த ஒரு கடப்பாட்டைக் கொண்டிருக்கும். அடிக்கடி மாறி வரும் தொழிலாளர் சந்தை, எதிர்நோக்கப்படும் சவால்கள் ஆகியவற்றைச் சமாளிக்கும் மலேசியாவின் திறன் புத்தாக்கச் சிந்தனையுடன் வலுப்பெறுவதற்கு இந்த ஒத்துழைப்பு அவசியமானதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
பெல்ஜியத்துடன் ஒப்பிடுகையில் மலேசியாவில் உள்ள சமூகப் பாதுகாப்பு முறை இன்னும் விரிவுபடுத்தப்பட்டு வருவதோடு பல்வேறு அம்சங்கள் அதில் சேர்க்கப்பட்டு வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. தொழிலாளர் காப்புறுதி பாதுகாப்புத் திட்டம், அவற்றின் அமலாக்கம் ஆகியவையும் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு பரவலான பாதுகாப்பைத் தொழிலாளர்களுக்கு வழங்குகிறது என்று அவர் மேலும் சொன்னார்.
அமைச்சர் அதேசமயத்தில் முழு நேரப் பணி, பகுதி நேரப் பணி அனைத்துக்கும் தொழிலாளர் காப்புறுதிப் பாதுகாப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டனார். இங்கு புரூசெல்சில் நேற்று முன்தினம் பெல்ஜியம் தேசியத் தொழிலாளர் அலுவலகம் – பெர்கேசோ இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய அவர் தெரிவித்தார்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பெர்கேசோ (வியூகம், கார்ப்பரெட்) துணைத் தலைமை நிர்வாக அதிகாரி எட்மண்ட் சியோங் பெக்ஸ் ஹுவாங், பெல்ஜியம் தேசியத் தொழிலாளர் அலுவலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஜின் மார்க் வென்டன்பெர்க் ஆகிய இருவரும் ஸ்டீவன் சிம், பெல்ஜியம், லக்சம்பர்க்கிற்கான மலேசியத் தூதர் டத்தோ முகமட் காலிட் அபாஸி அப்துல் ரசாக், பெர்கேசோ தொழிலாளர் சேவைப் பிரிவுத் தலைவர் காயத்ரி வடிவேல் ஆகியோர் முன்னிலையில் கையொப்பமிட்டனர்.
இந்த ஒத்துழைப்பின் வழி பெல்ஜியம் தேசியத் தொழிலாளர் அலுவலகம் அமல்படுத்தி இருக்கும் டிஜிட்டல் உருமாற்றம், வியூகம், மேம்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்யும் வாய்ப்பை பெர்கேசோ பெற்றிருக்கிறது. அதேசமயம் உலகளாவிய அளவில் எல்லை கடந்த ஏமாற்று, மோசடிகளைத் தடுக்கும் முயற்சிகளை இன்னும் ஆழமாகத் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பெல்ஜியம் மிகச்சிறந்த சமூகப் பாதுகாப்புத் திட்டத்தைக் கொண்டிருக்கிறது.
வேலை இல்லாதவர்களுக்கு வசதிகள், மறு பயிற்சித் திட்டம், தொழில்பயிற்சி நிபுணத்துவப் பயிற்சி, உயர் தொழில்நுட்பம், புத்தாக்கத் துறைகளில் உயர்திறன் தொழிலாளர்களை உருவாக்குவதல் போன்றவற்றில் பெல்ஜியம் அதீத கவனம் செலுத்தி வருகிறது என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கு இடையிலான குறிப்பாக இரு அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, தொழில்நுட்பம் புத்தாக்கத் துறையில் மிகச்சிறந்த நிர்வாகத் திறமைகளை அமல்படுத்துவதற்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஒட்டுமொத்த மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கு சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் கொள்கைகள் ஆகியவற்றை இன்னும் வலுப்படுத்தும் சாத்தியத்தையும் இந்த ஒத்துழைப்பின் வழி பெற முடியும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.




















