பாங்கி,
அனைத்துலக ஒத்துழைப்பின் வழி எதிர்கால அமலாக்க சவால்களை எதிர்கொள்வதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி தொடர்ந்து தயார் நிலையில் இருக்கிறது என்று அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.
உலகளாவிய கல்விக் கழகங்கள் வழி ஆற்றல்மிகு அதிகாரிகளை உருவாக்குவதன் வழி இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கு எம்ஏசிசி தொடர்ந்து முனைப்புக் காட்டி வருகிறது. இதற்கு கல்வித்துறையில் அனைத்துலக ஒத்துழைப்பு மிகப்பெரிய பங்காற்றும் என்று குறிப்பிட்ட அவர், மலேசிய ஊழல் தடுப்பு அகாடமி (எம்ஏசிஏ), நோட்டிங்ஹாம் திரென்ட் பல்கலைக்கழகம், இங்கிலாந்து ஆகிவற்றுக்கு இடையிலான அணுக்கமான பங்காளித்துவம் இந்த வெற்றிகளின் முக்கியத் திறவுகோலாக இருக்கும் என்றார்.
இந்த இரண்டு பல்கலைக்கழகங்களும் உலகளாவிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஊழல் தடுப்புப் பட்டதாரிகளை உருவாக்கி இருக்கிறது. தொழில்நுட்பம் மட்டுமன்றி சட்ட ரீதியிலான அறிவாற்றலையும் திறனையும் அவர்கள் கொண்டிருக்கின்றனர். மேலும் உயர்நெறி, கட்டொழுங்குமிக்க தலைமைத்துவம் ஆகியவற்றை இந்தப் பட்டதாரிகள் கொண்டுள்ளனர் என்று அஸாம் பாக்கி தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டில் இருந்து நோட்டிங்ஹாம் டிரென்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அனைத்துலக சட்ட அமலாக்கம்: ஊழல் தடுப்பு தலைமைத்துவம் (லெவல் 7) டிப்ளோமா, அனைத்துலக அமலாக்கச் சட்டம்: ஊழல் தடுப்பு ஆய்வுக் கல்வி (லெவல் 5) ஆகிய இரண்டு பிரபலமான கல்வித் திட்டங்களைக் கூட்டாக நடத்தி வருகின்றன. உள்நாட்டுத் தேவைகளுக்கேற்ப அனைத்துலகக் கல்வி அணுகுமுறைகளை ஒருங்கிணைக்கும் பயிற்சிகளை இப்பாடத்திட்டங்கள் கொண்டுள்ளன.
திறன்மிக்க மேலும் உயர் கட்டொழுங்கைக் கொண்டிருக்கும் அமலாக்க அதிகாரிகளை உருவாக்கும் ஓர் உன்னதக் களமாகவும் இப்பல்கலைக்கழகங்கள் திகழ்கின்றன என்று டான்ஸ்ரீ அஸாம் பாக்கி குறிப்பிட்டார். இங்கு இரண்டாவது எம்ஏசிசி சான்றிதழ் பெற்ற சட்ட அமலாக்கத் திட்ட பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
மொத்தம் 250 எம்ஏசிசி அதிகாரிகள் வெற்றிகரமான அவர்களின் படிப்பை முடித்து பட்டம் பெற்றனர். தெங்கு நூர் டியானா சயாமிமி தெங்கு ஸொல்நுரின், நோர் அஸிரா முகமட் அஸ்ரி, நூராரினா யுஸ்லிண்டா உஸுப் ஆகிய மூவரும் சிறந்த கல்வியாளர் விருதைப் பெற்றனர்.
நாட்டின் மிகப்பெரிய மிரட்டலாக ஊழல் தொடர்ந்து இருப்பதை ஒப்புக்கொண்ட அஸாம் பாக்கி இது நாட்டின் வளத்தை மட்டும் சூறையாடாமல் உயரிய பண்புகளையும் சேர்த்துக் கொள்ளையடிக்கிறது. மேலும் நிர்வாகத்தைப் பலவீனப்படுத்தி நாட்டின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை வெகுவாகப் பலவீனப்படுத்துகிறது என்று சொன்னார்.




















