கோலாலம்பூர்,
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆகியோர் இன்று தொலைபேசியில் உரையாடினர். மலேசியாவுக்கு எதிராக அமெரிக்கா விதிக்க உள்ள புதிய வரிவிதிப்பு முடிவுக்கு வரும் தேதிக்கு முன்னதாகவே இந்த உரையாடல் நடைபெற்றது என செய்திகள் வெளியாகின.
அமெரிக்க தரப்பில் இருந்து வந்த இந்த அழைப்பு இன்று காலை சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இரண்டு நாடுகளும் ஒரு ஒப்பந்தத்தை உறுதி செய்யும் நிலையில் உள்ளன. அந்த ஒப்பந்தத்தில், அமெரிக்கா விதிக்க உள்ள வரி விகிதத்தை அதிகபட்சம் 20% மற்றும் குறைந்தபட்சம் 15% ஆக நிர்ணயிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆகஸ்ட் 1ஆம் தேதி அல்லது அதற்கு முன்பே அறிவிக்கப்படலாம் என Straits Times செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் மலேசியா, அமெரிக்காவின் ஹலால் சான்றிதழை சில பொருட்களில், குறிப்பாக மருந்துகளுக்கு அங்கீகரிக்கத் தயார் என கூறப்படுகிறது. இதனால் அமெரிக்கா தயாரிக்கும் ஹலால் பொருட்களுக்கு மலேசியா தனித்து சான்றிதழ் வழங்க தேவையில்லை.
அதே நேரத்தில், மலேசியாவில் உள்ள 16 மில்லியன் டன் மதிப்புள்ள ரேர் எர்த் கனிமங்களை அமெரிக்காவுக்கு வழங்கும் திட்டமும் உள்ளது. தற்போது இவை பெரும்பாலும் சீனாவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அமெரிக்கா தனது தேசிய பாதுகாப்பு அதிகார பூர்வ உத்தியில் rare earths கனிமங்களை முக்கிய அம்சமாகக் கொண்டுள்ளது. இவை கைபேசிகள், மின்சார உற்பத்தியாளர் சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த அழைப்புக்கு ஒரு நாள் முன்பு, அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ மொஹமட் ஹசன் ஆகியோர் உரையாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.























