கோலாலம்பூர்,
விளையாட்டு என்பது மக்களை ஒன்றிணைக்கும் ஒரு சக்தியாக இருக்க வேண்டும்; அதில் வன்முறை, குழப்பம், அடக்குமுறை போன்ற செயல்களுக்கு இடமில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இன்று ஒலிம்பிக் ஹவுஸ் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றிய அவர், “தங்களது மாநிலத்தையோ அணியையோ மக்கள் ஆதரிப்பது இயல்பானது. ஆனால், அதனை காரணமாக காட்டி ஒழுக்கமற்ற நடத்தை அனுமதிக்க முடியாது,” என வலியுறுத்தினார்.
வெற்றி, தோல்வி என்பவை விளையாட்டில் இயல்பானவை என்றாலும், அதனால் விளையாட்டு ஒழுக்கம் (sportsmanship) மீறப்படக்கூடாது என்றும் அவர் கூறினார்.
மலாய், சீனர், இந்தியர் என இனத்தையே மறந்துபோய், மலேசியர்கள் ஒருமித்த உணர்வுடன் விளையாட்டை அனுபவிப்பது நாட்டின் வரலாற்றில் காணக்கூடிய ஒரு சிறப்பம்சம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இளைய தலைமுறையினரிடம் விளையாட்டு ஒழுக்கத்தின் மதிப்பைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும், விளையாட்டு வெற்றி மட்டுமல்ல, ஒழுக்கத்தையும் வளர்க்கும் இடமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
























