சுயாதீனப் போதகருக்கு 15 ஆண்டுகள் சிறை; 3 பிரம்படிகள்

கோலாலம்பூர்: சுயாதீனப் போதகர் பாத்தி நஈம் மஸ்லாம், 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும், தாக்குதல் நடத்தியதும் நிரூபிக்கப்பட்டதையடுத்து, கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் இன்று அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 3 பிரம்படியும் விதித்தது. நீதிபதி நோரிதா ஆடம், குற்றப்பத்திரிகை சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களில் சந்தேகம் ஏற்பட வழியில்லை எனக் குறிப்பிட்டார். இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்டபின், நீதிமன்றம் வழங்கப்பட்ட ஆதாரங்களால் திருப்தி அடைந்துள்ளது. குற்றச்சாட்டுகள் அனைத்திலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார் என்று நீதிபதி கூறினார்.

முதல் மற்றும் இரண்டாவது குற்றச்சாட்டுகளில், “உஸ்தாஸ் பாத்தி நஈம்” எனவும் அழைக்கப்படும் பாத்தி, 2021 ஜூலை மாதத் தொடக்கத்தில் மாலை 3 மணியிலும், ஜூலை 27ஆம் தேதி மாலை 7 மணியிலும், பண்டார் பாரு புஞ்சாக் ஆலம், கோல சிலாங்கூரிலுள்ள டத்தாரான் ஈகோ வேர்ல்டு கார் பார்க்கில் வாகனத்திற்குள் சிறுமியை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த குற்றச்சாட்டுகள் குற்றவியல் சட்டம் பிரிவு 376(1)ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பிரம்டியும் விதிக்கப்படலாம். மூன்றாவது குற்றச்சாட்டில், 2021 ஜூன் மாதம் அதே இடத்தில் அதே சிறுமியை உடல்ரீதியாக பாலியல் தாக்குதல் நடத்தியதற்காக 2017ஆம் ஆண்டு குழந்தைகள் மீது பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டத்தின் பிரிவு 14(a)ன் கீழ் தண்டிக்கப்பட்டார்.

தண்டனை குறைப்புக்காக மனு சமர்ப்பிக்கும் போது, 8 குழந்தைகளின் தந்தையான குற்றவாளி, தமக்கு 3 மனைவிகள் இருப்பதாகவும், வழக்கறிஞர் இல்லாமல் தானே நீதிமன்றத்தில் ஆஜரானதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை சார்பில் துணை அரசு வழக்கறிஞர் நூர் அயூனி ஜம்ரி ஆஜரானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here