ஹேர் டை பழக்கத்தின் கடும் விளைவு: சிறுநீரகப் பாதிப்பு!

பெய்ஜிங்:

சீனாவில் 20 வயதுடைய இளம்பெண் ஒருவர், தலைமுடிக்குத் தொடர்ந்து வண்ணம் மாற்றிச் சாயம் பூசியதால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த ஹுவா என்ற அந்த இளம்பெண், தன்னுடைய விருப்பமான ‘கே-பாப்’ இசைக் கலைஞரைப் பின்பற்றி ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு வண்ணத் தலைமுடிச் சாயத்தைப் பயன்படுத்தி வந்துள்ளார்.

சில மாதங்களுக்கு பிறகு, கால்களில் சிவப்புப் புள்ளிகள் தோன்றுதல், மூட்டு வலி, வயிற்று வலி போன்ற உடல்நலப் பிரச்சினைகள் அவருக்கு ஏற்பட்டன. இதனால் மருத்துவ ஆலோசனைக்கு சென்ற அவர் மீது நடத்தப்பட்ட பரிசோதனையில், சிறுநீரகப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது என்று South China Morning Post செய்தி தெரிவித்துள்ளது.

வல்லுநர்கள் தெரிவிக்கையில், தலைமுடிச் சாயங்களில் உள்ள சில ரசாயனக் கலவைகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. சில சாயங்களில் காணப்படும் பொருட்கள் விலங்குகளில் புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. மனிதர்களில் இது குறித்து இன்னும் தெளிவான முடிவு எட்டப்படவில்லை என்றாலும், சிறுநீரகப் பாதிப்பு, சுவாசக் கோளாறு, ஒவ்வாமை, முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், கர்ப்பிணிப் பெண்கள் தலைமுடிச் சாயங்களை அதிகமாகப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். குறிப்பாக கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here