மழைக்கால சேதங்களை சரிசெய்ய மலேசியாவிற்கு RM327.8 மில்லியன் தேவை-நந்தா லிங்கி

கோலாலம்பூர்:

வடகிழக்கு பருவமழையால் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களைச் சரிசெய்ய இதுவரை RM327.8 மில்லியன் தேவைப்படும் என பணிகள் அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.

சாலை பழுதுபார்ப்புகளுக்கு RM225.9 மில்லியன், கூட்டாட்சி சாலைகளில் நடைபாதை அல்லாத உள்கட்டமைப்பு பணிகளுக்கு RM47.4 மில்லியன், மேலும் சாய்வு பகுதிகளை மறுசீரமைக்கும் பணிகளுக்கு RM54.5 மில்லியன் தேவையாக உள்ளது என்று, பணிகள் அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவிததார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த மதிப்பீடு தற்போதைய அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது; கூடுதல் சேதங்கள் கண்டறியப்பட்டால் செலவு அதிகரிக்கக்கூடும் என்றார்.

“இப்போது எங்களிடம் பழுதுபார்ப்பு பணிகளுக்குப் போதுமான பட்ஜெட் உள்ளது. இருப்பினும், பருவமழை நிலைமை எவ்வாறு முன்னேறுகிறது என்பதை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,” என்று CIDB இன் புதிய கட்டுமான பணியாளர் பதிவு அட்டையை அறிமுகப்படுத்திய பின்னர் நந்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தற்போதைய நிலைமை கட்டுக்குள் உள்ளது மற்றும் முந்தைய ஆண்டுகளைப் போல கடுமையான சேதம் ஏற்படவில்லை. பணிகள் அமைச்சகத்துக்கு அவசர பழுதுபார்ப்பு பணிகளுக்கான தனித்த உள்கட்டமைப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த செலவு தற்போதைய பட்ஜெட்டை மீறினால், கூடுதல் நிதிக்கான கோரிக்கை பொருளாதார அமைச்சகத்துக்கும் நிதி அமைச்சகத்திற்கும் அனுப்பப்படும்.

மேலும், பல மாநிலங்களில் வெள்ளத்தால் சேதமடைந்த பொது உள்கட்டமைப்பை சரிசெய்ய முன்னதாக RM500 மில்லியன் சிறப்பு ஒதுக்கீட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அங்கீகரித்துள்ளார் என்பதையும் நந்தா நினைவூட்டினார்.

“RM500 மில்லியன் என்பது பணிகள் அமைச்சகத்திற்கான தனிப்பட்ட நிதி அல்ல; இது மொத்த பேரிடர் மேலாண்மைக்கானது. இதன் பெரும்பகுதி NADMA மூலம் ஒருங்கிணைக்கப்படும்,” என அவர் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here