பெணாம்பாங்:
பேங்க் ராக்யாட் மடானி சமூகநல சட்டத்தின்கீழ், சபாவில் உள்ள கோத்தா பெலூட், பெணாம்பாங் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பி40 பிரிவின் 1,440 மாணவர்களுக்கு 144,000 ரிங்கிட் மதிப்புள்ள பள்ளி உபகரணப் பொருட்களையும் 460 மடிகணினிகளையும் வழங்கியது.

தொழில் முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத்துறை அமைச்சின்கீழ் செயல்படும் பேங்க ராக்யாட் இந்த 460 மடிகணினிகளை இரண்டு மாவட்டங்களில் உள்ள 55 பள்ளிகளுக்கு வழங்கியது என்று இங்கு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
இத்திட்டத்தின் கீழ் பேங்க் ராக்யாட் தலைமையகம், நாடு முழுவதும் உள்ள கிளை அலுவலகங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்ட கணினிகளை சேகரித்து உட்புறப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கியது என்று அதன் அமைச்சர் டத்தோ இவோன் பெனடிக் கூறினார்.

மடானி குடும்பத்தின் ஓர் அங்கம் என்ற முறையில் புறநகர் பகுதிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் கல்வி நலன்களில் அக்கறையும் பரிவும் செலுத்தும் கடப்பாட்டை அமைச்சு கொண்டிருக்கிறது என்று அவர் சொன்னார். பி40 பிரிவினரின் பிள்ளைகள் ஒருவர்கூட கல்வியைப் பெறுவதில் விடுபட்டு விடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்கு அரசுத்துறையும் தனியார் துறையும் பொறுப்புகளை பகிர்ந்து கொண்டு அவர்களின் நலன்களில் அக்கறை செலுத்துகின்றனர் என்பதை இந்த உதவித்திட்டம் பிரதிபலிக்கிறது என்று டத்தோ இவோன் குறிப்பிட்டார்.

இதனிடையே கல்வி ஒன்றே இவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தின் திறவுகோள் என்பதை உணர்ந்து கல்விக்கு நிதி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக பேங்க் ராக்யாட் இந்த உதவித்திட்டத்தை முன்னெடுத்துள்ளது என்று அதன் தலைவர் டத்தோ முகமட் இர்வான் முகமட் முபாராக் கூறினார்.
























