கோலாலம்பூர்:
மலேசியாவின் குடிநீர் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பெரும் நீர் இழப்பைத் தடுக்க, நாடு முழுவதும் உள்ள 39,000 கிலோ மீட்டர் நீளமுள்ள பழைய குழாய்களை மாற்றும் மாபெரும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இதற்காக சுமார் 58.5 பில்லியன் ரிங்கிட் (ஏறக்குறைய 18.5 பில்லியன் சிங்கப்பூர் டாலர்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மலேசியாவில் மொத்தம் 140,000 கிலோ மீட்டர் நீளத்திற்குத் தண்ணீர்க் குழாய்கள் உள்ளன. இதில் சுமார் மூன்றில் ஒரு பங்குக் குழாய்கள் மிகவும் பழையதாகிவிட்டன. இக்குழாய்களில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் மற்றும் கசிவுகள் காரணமாக, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நுகர்வோரைச் சென்றடைவதற்கு முன்பே வீணாகிறது. இதனை “வருவாய் ஈட்டாத நீர்” (Non-Revenue Water – NRW) என்று அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
தேசிய நீர்ச் சொத்து மேலாண்மை நிறுவனமான பெங்குருசான் அசெட் ஆயேர் பெர்ஹாட்டின் (PAAB) தலைவர் ஜசெனி மைடின்சா கூறுகையில், இது குறித்து ஊடகவியலாளர் கூட்டத்தில் கூறியதாவது: தற்போதுள்ள பல குழாய்கள் 30 ஆண்டுகளே ஆயுட்காலம் கொண்டவை. ஆனால், அவை 50 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் பயன்பாட்டில் உள்ளன என்றார்.
தொடர்ந்து தண்ணீரை வீண்விரயம் செய்து கொண்டிருக்கும் நிலையில், புதிய நீர் சுத்திகரிப்பு நிலையங்களைக் கட்டுவதில் பலனில்லை. இருக்கும் நீரைச் சேமிக்கப் பழைய குழாய்களை மாற்றுவதே தற்போதைய முதல் முன்னுரிமை என்றார் அவர்.
பழுதடைந்த குழாய்களை மாற்றுவதற்கான நிதியுதவி 2026-ஆம் ஆண்டில் தொடங்கும். இந்தப் பணிகளை 2050-ஆம் ஆண்டிற்குள் முழுமையாக நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
மக்கள் தொகை மற்றும் பொருளாதார வளர்ச்சியால் ஆண்டுதோறும் தண்ணீர்த் தேவை 5% முதல் 7% வரை உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே நீர்ப்பிடிப்புப் பகுதிகளை அரசிதழில் வெளியிட்டுப் பாதுகாப்பதும், ஆற்று நீர் வளங்கள் வீணாகாமல் வேலி அமைத்து கண்காணிப்பதும் அவசியம் என்று அவர் மேலும் கூறினார்.
நாட்டின் நீர்ச் சொத்துகள் குறித்து தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் (Auditor-General) தொடர்ச்சியான தணிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். முறையான திட்டமிடல் இல்லையெனில், எதிர்காலத்தில் மாற்று நீர் வளங்களைத் தேட வேண்டியிருக்கும் என்றும், அது குடிநீர் கட்டணம் உயரக் காரணமாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.




















