உட்லண்ட்ஸ், துவாஸ் எல்லைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்: பயணிகளுக்கு ICA முக்கிய எச்சரிக்கை!

சிங்கப்பூர் | மார்ச் 10, 2026:

மார்ச் மாத பள்ளி விடுமுறை மற்றும் ஹரிராயா வார இறுதி நாட்களை முன்னிட்டு, மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான உட்லண்ட்ஸ் (Woodlands) மற்றும் துவாஸ் (Tuas) எல்லைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) எச்சரித்துள்ளது.

குறிப்பாக மார்ச் 13 முதல் 22 வரை போக்குவரத்து மிகவும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சீனப் புத்தாண்டு காலத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் எல்லையைக் கடந்தனர். அப்போது ஒரு நாளில் மட்டும் அதிகபட்சமாக 5.65 லட்சம் பயணிகள் பயணித்தனர். மோட்டார் வாகன ஓட்டிகள் குடிநுழைவுச் சோதனையை முடிக்க சுமார் 3 மணிநேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

மேலும் மத்திய கிழக்கில் நிலவும் உலகளாவிய பாதுகாப்புச் சூழல் காரணமாக, சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் குடிநுழைவுச் சோதனைகளுக்கு வழக்கத்தை விட அதிக நேரம் எடுக்கக்கூடும்.

MyICA செயலியைப் பயன்படுத்தவும்: விரைவான பயணச் சோதனைகளுக்கு MyICA மொபைல் செயலி மூலம் QR கோட் (QR Codes) முறையைப் பயன்படுத்துமாறு பயணிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

சிங்கப்பூர் வருவதற்கு 3 நாட்களுக்கு முன்பே MyICA செயலி வழியாகச் சுகாதார உறுதிமொழியுடன் கூடிய சிங்கப்பூர் வருகை அட்டையை (SG Arrival Card) சமர்ப்பிக்க வேண்டும்.

பயணத்தைத் தொடங்கும் முன் தற்போதைய போக்குவரத்து நிலவரத்தைச் சரிபார்த்துவிட்டுப் புறப்படவும். முடிந்தவரை எல்லை தாண்டிய பேருந்து சேவைகளைப் பயன்படுத்துவது சிறந்தது.

உரிமம் மற்றும் அபராதம்: வெளிநாட்டு வாகன ஓட்டிகள் தங்களின் VEP (Vehicle Entry Permit) மற்றும் காப்பீட்டு ஆவணங்கள் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள அபராதங்கள் இருந்தால் நுழைவு மறுக்கப்படலாம்.

வரிசையை மீறிச் செல்லும் வாகன ஓட்டிகள் (Queue cutting) மீண்டும் வரிசையின் பின்னால் செல்லப் பணிக்கப்படுவார்கள். அதிகாரிகளின் உத்தரவுகளைப் மதிக்காதவர்கள் அல்லது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நடைபெற்று வரும் மறுமேம்பாட்டுப் பணிகளும் போக்குவரத்து மாற்றங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்லுமாறும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here