குடிநுழைவுத்துறை அதிகாரி என நாடகமாடி கொள்ளை: கோலாலம்பூரில் 32 வயது நபர் அதிரடி கைது!

கோலாலம்பூர் | மார்ச் 24, 2026

குடிநுழைவுத்துறை அதிகாரி என்று தன்னை போலியாக அடையாளப்படுத்திக் கொண்டு, வெளிநாட்டினரை மிரட்டி கொள்ளையடித்து வந்த 32 வயது உள்ளூர் நபர் ஒருவரை கோலாலம்பூர் டாங் வாங்கி (Dang Wangi) மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர், கோலாலம்பூர் பகுதிகளில் நடமாடும் வெளிநாட்டினரை அணுகி, தான் ஒரு குடிநுழைவுத்துறை அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொள்வார். பின்னர், அவர்களின் கடப்பிதழை (Passport) சரிபார்க்க வேண்டும் என மிரட்டி, அவர்களின் பணப்பையைப் பறித்துக்கொண்டு தப்பியோடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

நேற்று (மார்ச் 23) மதியம் சுமார் 1:30 மணியளவில் அந்த நபர் பிடிபட்டார் என்று, டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் சசாலி ஆடம் (ACP Shasali Adam) கூறினார்.

பறிமுதல்: சந்தேக நவரிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் உணவு விநியோகப் பை (Food Delivery Bag) ஆகியவை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கைது நடவடிக்கையின் மூலம், கடந்த சில நாட்களாகப் புகாரளிக்கப்பட்ட இரண்டு முக்கியக் கொள்ளைச் சம்பவங்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக ஏசிபி சசாலி குறிப்பிட்டுள்ளார். அந்த நபர் எதற்காக உணவு விநியோகப் பையைப் பயன்படுத்தினார் என்பது குறித்தும், இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாரிகள் என கூறிக்கொண்டு யாராவது அணுகினால், அவர்களின் அதிகாரப்பூர்வ அடையாள அட்டையைச் சரிபார்க்குமாறும், சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்து உடனடியாகப் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here