குர்ஆனை அவமதித்த விவகாரம்: பகாங் அப்ஸா (UMPSA) பல்கலைக்கழக மாணவர் விக்னேஸ்வரன் அதிரடி நீக்கம்!

குவாந்தான் | மார்ச் 24, 2026

இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை அவமதித்ததோடு, சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்ட புகாரில், மலேசியா பகாங் அல்-சுல்தான் அப்துல்லா பல்கலைக்கழக (UMPSA) மாணவர் ஒருவர் பல்கலைக்கழகத்திலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் யதிமா அலியாஸ் விடுத்துள்ள அறிக்கையில் பின்வருவனவற்றைத் தெரிவித்துள்ளார், கடந்த மார்ச் 9-ஆம் தேதி கூடிய மாணவர் ஒழுங்குமுறைக் குழு, அந்த மாணவர் மீதான புகாரை விசாரித்து குற்றவாளி என உறுதி செய்தது.
அதனடிப்படையில், 2024-ஆம் ஆண்டு பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரி (மாணவர் ஒழுக்கம்) விதிகளின் கீழ் விக்னேஸ்வரன் உடனடியாகப் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மத நிந்தனை, இனம் அல்லது அரச நிறுவனம் (3R) தொடர்பான வெறுப்புணர்வைத் தூண்டும் செயல்களைப் பல்கலைக்கழகம் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

சம்பந்தப்பட்ட 21 வயது மாணவர் எஸ். விக்னேஸ்வரன் மீது ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது:

கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி மதத்தை அவமதிக்கும் நோக்கில் புனித குர்ஆனை அவமதித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

“ryandaselva” என்ற த்ரெட்ஸ் (Threads) கணக்கைப் பயன்படுத்தி மற்றவர்களைப் புண்படுத்தும் வகையில் தேவையற்ற கருத்துகளைப் பகிர்ந்ததாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 3-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியுள்ளார். அவருக்கு 10,000 ரிங்கிட் பிணை (Bail) வழங்கப்பட்டுள்ளதுடன், அடுத்தக்கட்ட விசாரணை ஏப்ரல் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும், சமூக நல்லிணக்கத்தைப் பேணுமாறும் மாணவர்களையும் ஊழியர்களையும் பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here