மலேசியாவிலிருந்து மூசாங் கிங் டுரியான் இறக்குமதி மோசடி; சீன நிறுவனத்திற்கு RM2.6 மில்லியன் இழப்பு

கோலாலம்பூர்:

மலேசியாவிலிருந்து உறைந்த மூசாங் கிங் வகை டுரியான்களை இறக்குமதி மோசடியில் சிக்கி, சீன நிறுவனம் RM2.6 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில், அந்நிறுவனத்தின் மேலாளர் காவல்துறையில் புகாரளித்துள்ளதாக ஜோகூர் மாநிலக் காவல்துறை தலைவர் குமார் கூறினார்.

மலேசிய முகவரியைக் கொண்ட பழ ஏற்றுமதி, இறக்குமதிக்கான அனுமதியைப் பயன்படுத்தி குறித்த ஆடவர், உறைய வைக்கப்பட்ட டுரியான்களைச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் யோசனையை அந்த நிறுவனத்திடம் கூறியதாகவும், அதனைத் தொடர்ந்து அந்நிறுவனம் 4.3 மில்லியன் யுவான் மதிப்பிலான 3,840 பெட்டிகள் உறைந்த மூசாங் கிங் டுரியான் பழங்களை வாங்க முடிவு எடுத்ததாக அவர் சொன்னார்.

பின்னர் குறித்த பழங்களுக்கான தொகையையும் ஆடவர் கொடுத்த வங்கிக் கணக்கில் அந்நிறுவனம் வைப்பிலிட்டது.

பணம் கிடைத்த ஒரு மாதத்துக்குள் உறைந்த டுரியான் பழங்கள் சீனாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அந்நபர் உறுதியளித்தார், இருப்பினும் இன்றுவரை குறித்த பழங்கள் சீனாவை வந்து சேரவில்லை. பின்னர் அந்த ஆடவரையும் தொடர்புகொள்ள இயலவில்லை என்று நிறுவனம் புகாரில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மோசடியில் சம்பந்தப்பட்டிருப்பதும் ஒரு சீன நாட்டவர் என்று நம்பப்படுவதாக அவர் மேலும் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here