ஈப்போவில் சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை! இருவருக்கு 6 ஆண்டு சிறை மற்றும் 3 பிரம்படி – நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

ஈப்போ | ஏப்ரல் 1, 2026

மைனர் சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, இரண்டு இளைஞர்களுக்குத் தலா 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 3 பிரம்படிகள் விதித்து ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதி ஜீன் ஷர்மிளா ஜேசுதாசன் (Judge Jean Sharmila Jesudason) முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட முகமட் ஐருல் அபு தாலிப் (வயது 28) மற்றும் முகமட் அஸ்ரி முகமட் ஹுசின் (வயது 25) ஆகிய இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்.

அகழ்வாராய்ச்சி இயந்திர ஓட்டுநராகப் பணிபுரியும் முகமட் ஐருல், கடந்த 2024 ஜூன் மாதம் பேராக் தெங்கா மாவட்டத்திலுள்ள ஒரு வீட்டில் வைத்து, அப்போது 13 வயது 8 மாதமே நிரம்பியிருந்த அச்சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

கட்டுமானத் தொழிலாளியான முகமட் அஸ்ரி, அதே சிறுமியை கடந்த மார்ச் 21-ஆம் தேதி மாலை 7 மணியளவில் பேராக் தெங்கா மாவட்டத்தின் மற்றொரு பகுதியில் வைத்து வன்கொடுமை செய்துள்ளார்.

இவர்கள் இருவர் மீதும் தண்டனைச் சட்டம் பிரிவு 376(1)-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இச்சட்டப்பிரிவின் கீழ் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறை மற்றும் பிரம்படி வழங்கப்பட சட்டத்தில் இடமுண்டு.

இருவருக்கும் தலா 6 ஆண்டுகள் சிறை மற்றும் 3 பிரம்படிகள் விதிக்கப்பட்டுள்ளன.

சிறைத்தண்டனை முடிந்து வெளிவந்த பிறகு, அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர்கள் போலீஸ் கண்காணிப்பில் இருக்க வேண்டும். சிறையில் இருக்கும் காலத்தில் அவர்கள் முறையான ஆலோசனைகளுக்கு (Counselling) உட்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here