அம்னோவின் முடிவை ஏற்கத் தயார்: மீண்டும் இணைவது குறித்து ஏப்ரல் 17-இல் இறுதி முடிவு – கைரி ஜமாலுடின்

கோலாலம்பூர், ஏப்ரல் 11:

அம்னோவில் மீண்டும் இணைவதற்காகத் தான் சமர்ப்பித்துள்ள விண்ணப்பத்தின் மீது, கட்சியின் உச்சமன்றம் எடுக்கும் எந்தவொரு முடிவையும் மனமுவந்து ஏற்கத் தயாராக இருப்பதாக முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.

பெர்த்தாம் (Bertam) சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரீசால் மெரிக்கான் ஏற்பாடு செய்திருந்த நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களிடம் இதனைப் பகிர்ந்துகொண்டார்.

ஹரி ராயா கொண்டாட்டங்களுக்கு முன்பாகவே கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடியைச் சந்தித்துப் பேசியதாக கைரி குறிப்பிட்டார். வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில், தனது விண்ணப்பம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தன்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கைரி ஜமாலுடினுடன், ஹிஷாமுடின் ஹுசேன் உள்ளிட்ட மேலும் சில முக்கியத் தலைவர்களும் மீண்டும் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கெப்பாலா பாத்தாஸ் நாடாளுமன்றத் தொகுதியில் அவர் போட்டியிடக்கூடும் என எழுந்துள்ள ஊகங்களுக்குப் பதிலளித்த கைரி:

“அத்தொகுதியை ரீசால் மெரிக்கான் அவர்களே தொடர்ந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது மாமனாரும் முன்னாள் பிரதமருமான மறைந்த துன் அப்துல்லா அகமட் படாவியின் விருப்பமாகும். அந்த விருப்பத்திற்கு நான் எப்போதும் மதிப்பளிப்பேன்,”என்று தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here