போர்ப்ஸ் 2026: மலேசியாவின் 50 பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 116 பில்லியன் டாலராக உயர்வு!

கோலாலம்பூர்:

மலேசியாவின் 50 பெரும் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட சுமார் 30 விழுக்காடு உயர்ந்து, 116 பில்லியன் டாலரை (சுமார் 458 பில்லியன் ரிங்கிட்) எட்டியுள்ளதாக போர்ப்ஸ் ஆசியா (Forbes Asia) இதழ் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. நாட்டின் வலுவான பொருளாதார வளர்ச்சி (5.2%), ரிங்கிட் மதிப்பின் உயர்வு மற்றும் பங்குச் சந்தையில் நிகழ்ந்த பல புதிய நிறுவனங்களின் அறிமுகம் (IPO Market) ஆகியவை இந்த அபரிமித வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.

102 வயதான தொழில்துறை ஜாம்பவான் ரோபர்ட் குவோக் (Robert Kuok), 13.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். இவரது குவோக் குழுமம் விவசாயம் முதல் தரவு மையங்கள் (Data Centres) வரை பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளது.

முதன்முறையாக, பிரஸ் மெட்டல் அலுமினியம் ஹோல்டிங்ஸ் (Press Metal Aluminium Holdings) நிறுவனத்தின் கூன் போ கியோங் (Koon Poh Keong) மற்றும் அவரது சகோதரர்கள் 9.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட 80% உயர்ந்துள்ளது.

IOI Group இன் லீ யோ சோர் (Lee Yeow Chor) மற்றும் லீ யோ செங் (Lee Yeow Seng) சகோதரர்கள், 8.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

இவ்வாண்டு பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் 41 பேரின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

அதேநேரம் 99 Speed Mart இன் நிறுவனர் லீ தியாம் வா (Lee Thiam Wah), தனது சில்லறை விற்பனை சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியதன் மூலம், 6.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஆறாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இக்கோ-ஷாப் (Eco-Shop) நிறுவனத்தின் லீ கார் வாட் (Lee Kar Whatt), 1.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இவ்வாண்டு பட்டியலில் புதியதாக இணைந்துள்ளார்.

மேலும், இவ்வாண்டு பட்டியலில் இடம்பெறுவதற்கான குறைந்தபட்ச சொத்து மதிப்பு வரம்பும் 335 மில்லியன் டாலரிலிருந்து 422 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here