முன்னாள் மனைவியை கோமா நிலைக்கு உள்ளாக்கிய நபருக்கு 14 ஆண்டு சிறை; மற்றொரு மனைவி மீது தாக்குதல் நடத்தி கருச்சிதைவு ஏற்படுத்தியதாக மீண்டும் கைது!

சுங்கை பட்டாணி :

னது முன்னாள் மனைவியை அடித்துக் கோமா நிலைக்கு ஆளாக்கிய வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ரோஸ்மைனி அப்துல் ரவூப் (43), இன்று மீண்டும் ஒரு கொடூரமான குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தற்போது சிறையில் உள்ள ரோஸ்மைனி, தனது மற்றொரு மனைவியான 39 வயது அரசு ஊழியரைத் தாக்கியதாகப் புதிய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார். இந்தத் தாக்குதலின் போது 12 வார கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண்ணுக்குக் கடுமையான காயம் ஏற்பட்டு, இறுதியில் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாகக் காவல் துறை தெரிவித்தது.

இன்று காலை 8:30 மணியளவில் சுங்கை பட்டாணி நீதிமன்ற வளாகத்திற்கு ஆரஞ்சு நிற சிறை உடையில் அவர் அழைத்து வரப்பட்டார்.

விசாரணையில் ரோஸ்மைனி இதுவரை 9 முறை திருமணம் செய்துள்ளதாகவும், அவர்கள் அனைவருமே அரசு ஊழியர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. தற்போதைய மனைவி மீது இரும்புத் தடி மற்றும் துணி தொங்கவிடும் ஹேங்கர் (Hanger) கொண்டு தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் முதுகெலும்பு மற்றும் விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமைதான், தனது முன்னாள் மனைவி ஜாஹிதா நோர்டினை (48) கொடூரமாகத் தாக்கியதற்காக ரோஸ்மைனிக்கு 14 ஆண்டுகள் சிறை மற்றும் RM25,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜாஹிதா கடந்த 2021-ம் ஆண்டிலிருந்து கோமா நிலையிலேயே (Vegetative state) உள்ளார்.

தாக்குதலின் போது கர்ப்பமாக இருந்த ஜாஹிதா, கோமா நிலையிலேயே அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அந்தக் குழந்தை தற்போது மாற்றுத்திறனாளியாகப் பிறந்துள்ளான்.

அதேநேரம் தற்போதைய கருச்சிதைவு வழக்கில் ரோஸ்மைனி மீது தண்டனைச் சட்டம் பிரிவு 326-ன் கீழ் (ஆபத்தான ஆயுதங்களால் கடுமையான காயம் விளைவித்தல்) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டிற்கு: 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம், கட்டாயப் பிரம்படி
ஆகியவை தண்டனையாக வழங்கப்பட வாய்ப்புள்ளது.

தொடர்ச்சியாக மனைவிகள் மீதான இத்தகைய கொடூரத் தாக்குதல் மலேசியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here