(டில்லிராணி முத்து)
சித்தியவான்:
சித்தியவான் டிண்டிங்ஸ் இந்தியர் சங்கமும், ஸ்ரீ ஸ்வர்ணா ஃபைன் ஆர்ட்ஸும் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் அன்னையர் தின நடை சிறப்பு நிகழ்ச்சி இன்று காலை 7.00 மணி தொடங்கி காலை 11.00 மணி வரை சித்தியவான் டிண்டிங்ஸ் இந்தியர் சங்க வளாகத்தில் வெகு விமரிசையாக நடந்தேறியது.

சித்தியவான் டிண்டிங்ஸ் இந்தியர் சங்கத்தின் தலைவர் மகாலிங்கம் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தாய்மார்கள் சங்க வளாகத்தின் அருகிலுள்ள வீடமைப்புப் பகுதியைச் சுற்றி சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடைப்பயணம் மேற்கொண்டனர்.

நடை பயணத்தில் அன்னையர் எடுத்த வைத்த ஒவ்வொரு அடியும் அன்னையரின் அன்புக்கும் வலிமைக்கும் அர்ப்பணிக்கப்பட்ட காணிக்கை என்ற உயரிய நோக்கத்துடன் நடைபெற்ற இந்த நடைப்பயணத்தில் ஏறத்தாழ 90க்கும் மேற்பட்ட தாய்மார்கள் மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அனைவரும் சேலை அணிந்து இந்தியக் கலாச்சார மரபை பெருமையுடன் பின்பற்றி கலந்து கொண்டது இந்நிகழ்ச்சிக்கு தனிச்சிறப்பாக அமைந்தது என சங்கத்தின் தலைவர் மகாலிங்கம் கூறினார்.

குறிப்பாக மலாய் இனத்தைச் சேர்ந்த 10 தாய்மார்களும் இந்திய பாரம்பரிய உடையான சேலையில் பங்கேற்றது அனைவரின் பாராட்டையும் பெற்றதோடு, இது மலேசியாவின் பல்லின மக்களிடையே நிலவும் ஒற்றுமை, நல்லிணக்கம், பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தும் அழகிய எடுத்துக்காட்டாக அமைந்தது என்றார் அவர்.

அதோடு அன்னையரின் தியாகத்தையும் குடும்ப வளர்ச்சியில்
அவர்களின் அர்ப்பணிப்பையும் எடுத்துரைத்த மகாலிங்கம்,
சமூகத்தில் பெண்களுக்கு உரிய மரியாதை தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அன்னையரின் அன்பு, அர்ப்பணிப்பு தியாகம் ஆகியவற்றை போற்றும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி அனைவரின் மனதையும் கவர்ந்தது மட்டுமன்றி அன்னை என்ற உயர்ந்த உறவை கொண்டாடிய மறக்கமுடியாத தருணமாகவும் மிளிர்ந்தது என இந்நிகழ்ச்சியின் மற்றொமொரு ஏற்பாட்டாளரான ஸ்ரீ ஸ்வர்ணா ஃபைன் ஆர்ட்ஸின் தோற்றுநர் கிளாரா ஃபிரான்சிஸ் தெரிவித்தார்.
இந்த நடைப்பயணம், பங்கேற்றவர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதோடு குடும்பத்திற்காக இடைவிடாமல் உழைக்கும் தாய்மார்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்நிகழ்ச்சி அமைந்தது என்றும் அவர் மேலும் கூறினார்.

இதனிடையே இந்த நடை பயணத்தில் பங்கேற்ற தாய்மார்கள் அனைவரும், சேலையில் நடை பயணம் மேற்கொண்டது தங்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது என்றும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் அடுத்தாண்டும் தொடர வேண்டும் எனவும் ஏற்பாட்டுக் குழுவினரைக் கேட்டுக் கொண்டனர்.

தொடர்ந்து இந்த நடை பயணத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்ட நிலையில் கலந்து கொண்ட அனைத்து தாய்மார்களுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன





















