கோலாலம்பூர்:
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பொய் வதந்தி பரப்பிய பிரபல வலைப்பதிவர் (Blogger) ‘பாப்பகோமோ’ என்ற வான் முஹமட் அஸ்ரி வான் டெரிஸ், பினாங்கு முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங் மற்றும் அவரது மகன் கிளின்ட் லிம் ஆகியோருக்கு மொத்தம் 280,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லான் மாட் நோர், வான் அஸ்ரி (பாப்பகோமோ) லிம் குவான் எங்கிற்கு RM200,000 மற்றும் அவரது மகன் கிளின்டிற்கு RM80,000 இழப்பீடாக வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தார். இத்துடன் நீதிமன்றச் செலவுத் தொகையாக முறையே RM30,000 மற்றும் RM10,000 வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.
கடந்த 2020 பிப்ரவரி 29 அன்று, கிளின்ட் லிம் சாங்கி விமான நிலையத்தில் கணக்கில் காட்டப்படாத 2 மில்லியன் ரிங்கிட் பணத்தைக் கொண்டு சென்றதாகக் கூறி சிங்கப்பூர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக வான் அஸ்ரி தனது முகநூல் (Facebook) பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மேலும், அன்று அதே நாளில் லிம் குவான் எங் தனது மகனை விடுவிப்பதற்காகத் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்த சிங்கப்பூருக்குப் பறந்தார் என்றும் அந்தப் பதிவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த அவதூறான மற்றும் தவறான பதிவினால் தங்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கப்பட்டதாகக் கூறி, லிம் குவான் எங் மற்றும் அவரது மகன் கடந்த 2020 அக்டோபர் 15 அன்று வான் அஸ்ரிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர்.
இன்று நடைபெற்ற இறுதி விசாரணையில், பாப்பகோமோ வெளியிட்ட தகவல்கள் முற்றிலும் பொய்யானவை, அபாண்டமானவை மற்றும் உள்நோக்கம் கொண்டவை என்பதை உறுதிப்படுத்திய நீதிமன்றம், அவருக்கு இந்த அபராதத்தை விதித்துத் தீர்ப்பளித்தது.





















