குவாந்தான்:
முகநூலில் (Facebook) வந்த போலி பங்குச் சந்தை முதலீட்டு விளம்பரத்தை நம்பி, தெமர்லோவைச் சேர்ந்த 67 வயது சொத்து மதிப்பு நிறுவன மேலாளர் (பெண்) ஒருவர், 505,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான பணத்தை ஏமாந்துள்ளார்.
கடந்த மார்ச் 28 அன்று முகநூலில் முதலீடு தொடர்பான விளம்பரம் ஒன்றைக் கண்ட அந்தப் பெண், அதில் இருந்த நபரை வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் தொடர்பு கொண்டுள்ளார். சந்தேக நபர் ஆசை வார்த்தைகளைக் கூறி, அந்தப் பெண்ணின் தனிப்பட்ட விவரங்களைப் பெற்றுக் கொண்டு இத்திட்டத்தில் அவரை இணைய வைத்துள்ளார் என்று, பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஒத்மான் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, மார்ச் 28 முதல் ஏப்ரல் 28 வரையிலான ஒரே மாத காலத்திற்குள், சந்தேக நபர் கொடுத்த பல்வேறு வங்கித் கணக்குகளுக்கு ஆன்லைன் பரிமாற்றம், சிடிஎம் (CDM) இயந்திரங்கள் மற்றும் வங்கி கவுண்ட்டர்கள் வழியாக மொத்தம் 61 முறை அந்தப் பெண் பணத்தை அனுப்பியுள்ளார்.
ஏப்ரல் 29 அன்று, அந்தப் பெண்ணிற்கு முதலீட்டு லாபமாக RM658,646.88 கிடைத்துள்ளதாகச் சந்தேக நபர்கள் காட்டியுள்ளனர். ஆனால், அந்தப் பணத்தை அவர் திரும்பப் பெற வேண்டும் என்றால், ‘சேவைக் கட்டணமாக’ (Service Charge) மேலும் RM80,000 செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண், தனக்குக் கிடைத்துள்ள லாபப் பணத்திலிருந்தே அந்தச் சேவைக் கட்டணத்தைக் கழித்துக் கொள்ளுமாறு கோரியுள்ளார். ஆனால், அதனை நிராகரித்த மோசடி கும்பல், முதலில் முழுத் தொகையையும் தனியாகச் செலுத்த வேண்டும் என்று கறாராகக் கூறப்பட்டது.
பணத்தைத் திரும்பப் பெற முடியாது என்பதை உணர்ந்த பிறகே, தான் ஏமாற்றப்பட்டதை அந்தப் பெண் அறிந்துகொண்டார். இந்த மோசடியில் அவர் தனது சொந்தச் சேமிப்புப் பணம் மட்டுமின்றி, தனது குடும்ப உறுப்பினர்களின் பணத்தையும் சேர்த்து இழந்துள்ளார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் ஏதேனும் ஒரு முதலீட்டுத் திட்டத்தில் இணையும் முன்பாக, அது குறித்து மலேசிய மத்திய வங்கி (Bank Negara Malaysia) மற்றும் மலேசியப் பத்திரங்கள் ஆணையத்திடம் (Securities Commission Malaysia) சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று டத்தோஸ்ரீ யஹாயா அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஏதேனும் கணக்கு எண்களுக்குப் பணம் அனுப்பும் முன், அவை மோசடிப் பின்னணி கொண்டவையா என்பதைப் போலீசாரின் ‘செமாக் மூலே’ (Semak Mule) தளம் வழி உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.




















