சொந்த மகனின் வயிற்றிலேயே உதைத்த இராணுவ வீரர்! கோத்தா பாரு நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு

கோத்தா பாரு:

டந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது 10 வயது சொந்த மகனைக் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை, 42 வயதுடைய இராணுவ வீரர் ஒருவர், இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

சந்தேக நபரான ஜைனுடின் ஜைனல் ஆபிதின் (Zainudin Zainal Abidin) என்ற அந்த இராணுவ வீரர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு வாசித்துக் காட்டப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதி சுல்கிஃப்லி அப்ல்லா (Judge Zulkifli Abllah) முன்னிலையில் அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குற்றச்சாட்டை மறுத்தார்.

குற்றச்சாட்டுகளின்படி, கடந்த 2024-ஆம் ஆண்டு மே 11 அன்று இரவு சுமார் 7.30 மணியளவில், இங்குள்ள கம்போங் கிஜாங்கில் (Kampung Kijang) உள்ள ஒரு வீட்டில் வைத்து, ஜைனுடின் தனது 10 வயது மகனின் வயிற்றில் காலால் பலமாக உதைத்ததாகவும், முகத்தில் கொடூரமாக அறைந்து துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பெற்றோரே குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டிய நிலையில், ஒரு இராணுவ வீரராக இருந்து கொண்டு தனது சொந்த மகனையே அவர் மிருகத்தனமாகத் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அராஜகக் குற்றம் 2001-ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டம் பிரிவு 31(1)(a)-இன் கீழ் (Child Act 2001) பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 50,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் சேர்த்தோ விதிக்கப்பட சட்டத்தில் இடமுண்டு.

இவ்வழக்கில் அரசாங்கத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் நூர் காமிலா சே இப்ராஹிம் வாதாடினார். சந்தேக நபரான ராணுவ வீரர் தரப்பில் வழக்கறிஞர் சம்சுல் பஹ்ரின் முன்னிலையானார்.

வழக்கை ஆராய்ந்த நீதிபதி சுல்கிஃப்லி, ஜைனுடினுக்கு ஒரு ஜாமீன்தாரருடன் 10,000 ரிங்கிட் நீதிமன்றப் பிணை (Bail) வழங்கி உத்தரவிட்டார். மேலும், இவ்வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்கும் வரும் ஜூன் 24-ஆம் தேதியை நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here