பெரிக்காத்தான் நேஷனலில் அதிகமான இந்தியர்கள் சேர்கின்றனர்

க. கலை

போர்ட்டிக்சன், ஜூலை 18-

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் சேர்வதற்கு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியைச் சேர்ந்த பலர் தொடர்ந்து விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து வருகின்றனர் என்று அக்கூட்டணியின் நெகிரி செம்பிலான் மாநிலத் தலைவர் டத்தோஸ்ரீ அமாட் ஃபைஸால் டத்தோ ஹாஜி அஸுமு தெரிவித்தார்.

இங்கு பிடி கோல்ப் கன்ட்றியில் நேற்று முன்தினம் மாலை போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் இடம்பெற்றுள்ள 5 சட்டமன்றங்களுக்கான தேர்தல் கேந்திரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இத்தகவலைச் சொன்னார். 

வரும் ஆகஸ்டு 12ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் உட்பட ஆறு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி 245 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளது. நெகிரி செம்பிலானைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலில் அம்மாநிலத்தைக் கைப்பற்றும் நம்பிக்கையை பெரிக்காத்தான் நேஷனல் கொண்டிருக்கிறது என்று டத்தோஸ்ரீ அமாட் ஃபைஸால் குறிப்பிட்டார். 

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணைந்து கொள்வதற்கு எதிரணியில் உள்ள தொகுதித் தலைவர்கள், மகளிர் அணியினர், உறுப்பினர்கள் ஆகியோர் தம்மை நேரடியாகச் சந்தித்து ஆர்வம் தெரிவித்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

மாநிலத்தில் 36 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. மாநிலத்தைக் கைப்பற்றும் அளவுக்கு பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் கேந்திரங்கள் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு வருகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இம்மாநிலத்தின் 36 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியல் கிட்டத்தட்ட நிறைவைப் பெற்றிருக்கிறது. விரைவில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்று அமாட் ஃபைஸால் சொன்னார்.

அதே சமயம் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கான இளைஞர்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது. தேர்வு செய்யப்பட்டிருக்கும் வேட்பாளர்கள் அனைவரும் சிறந்த மக்கள் சேவையாளர்கள் என்று அவர் தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் மஇகா முன்னாள் தலைவரும் ஜாசா அதிகாரியுமான மோகனதாஸ், லுக்குட்டைச் சேர்ந்த டத்தோ ரகு, டத்தோ செங் லீ தியோ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வீரா ஹாஜா மாஸ் எர்மியாத்தி பிந்தி சம்சுடின் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இவர்களோடு பெரிக்காத்தான் நேஷனல் போர்ட்டிக்சன் தொகுதித் தலைவர் ஹாஜி முகமட் ஹனாஃபி ஸைனும் பங்கேற்றார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here