பாஸ்-பெர்சத்து இடையே வெடித்த மோதல்: சமரசம் செய்யத் தயார் என மலேசிய இந்திய மக்கள் கட்சி (MIPP) அறிவிப்பு!

இஸ்கந்தர் புத்திரி:

பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் முக்கிய அங்கத்துவக் கட்சிகளான பாஸ் (PAS) மற்றும் பெர்சத்து (Bersatu) ஆகிய கட்சிகளுக்கு இடையே நிலவி வரும் அரசியல் பதற்றத்தைத் தணித்து, இருதரப்பையும் சமரசம் செய்யத் தாங்கள் தயாராக இருப்பதாக மலேசிய இந்திய மக்கள் கட்சி (MIPP) தெரிவித்துள்ளது.

பொதுவெளியில் நீடிக்கும் இத்தகைய கருத்து வேறுபாடுகள் எதிர்க்கட்சிக் கூட்டணியான பி.என் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைத்துவிடும் என்று எம்.ஐ.பி.பி எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ஜோகூரில் நடைபெற்ற அக்கட்சியின் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஐ.பி.பி தலைவரும், பி.என் கூட்டணியின் துணைத் தலைவருமான எஸ்.பி. புனிதன், வரவிருக்கும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, கூட்டணியின் ஒற்றுமை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க இத்தகைய கருத்து வேறுபாடுகள் உள்வட்டாரப் பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பாஸ் மற்றும் பெர்சத்து கட்சித் தலைவர்களுக்கு இடையே அண்மைகாலமாக ஏற்பட்டுள்ள வார்த்தைப் போரினால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக எழுந்துள்ள ஊகங்கள் குறித்துப் புனிதன் மேலும் கூறுகையில், “தற்போது சமூக ஊடகங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகும் காரசாரமான அறிக்கைகள் பலவும் பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிகளின் கீழ்மட்ட மற்றும் நடுத்தர உறுப்பினர்களால் வெளியிடப்படுபவை ஆகும். இரு கட்சிகளின் உச்சகட்ட தலைமைத்துவ மட்டத்தில் (Top Leadership) தற்போதும் சுமுகமான மற்றும் இணக்கமான சூழலே நிலவி வருகிறது” என்றார்.

கூட்டணிக்குள் சில விவகாரங்கள் கவனிக்கப்பட வேண்டியவை இருக்கலாம், ஆனால் அவற்றை மேடைகளில் விவாதிக்காமல் அமர்ந்து பேசித் தீர்க்க முடியும். பி.என் கூட்டணியின் துணைத் தலைவர் என்ற முறையில், இருதரப்பும் தற்போதைய சூழ்நிலையை நேரில் அமர்ந்து பேசுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். கூட்டணியின் உள்விவகாரங்கள் பொதுமக்களின் நம்பிக்கையைக் கெடுக்கும் நிலையை எட்ட நாங்கள் விரும்பவில்லை. தேவைப்பட்டால், இதில் நடுநிலையாளராகப் (Middleman) பணியாற்ற எம்.ஐ.பி.பி தயாராக உள்ளது,” என்றார்.

மலாக்காவைச் சேர்ந்த பெர்சத்து தலைவர் ஒருவர், பாஸ் கட்சியை விமர்சிக்கும் வகையில் அண்மையில் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அகமத் ஃபத்லி ஷாரி, எதிர்காலத் தேர்தல்களில் பாஸ் மற்றும் பெர்சத்து ஆகிய இரு கட்சிகளும் தனித்தனிப் பாதைகளில் பயணிக்க வேண்டிய நிலை வரலாம் என சூசகமாகத் தெரிவித்தார்.

இந்தத் தொடர் அறிக்கைகள் கூட்டணியில் பெரிய பிளவை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் வேளையில், கீழ்மட்டக் கருத்து வேறுபாடுகளைத் தாண்டி பி.என்-இன் உயர்மட்டக் கூட்டுறவு இன்னும் வலுவாகவே உள்ளது என புனிதன் நிலைமையை சுமுகமாக்க முயன்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here