(செ.குணாளன்)
பிறை:
“தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு” எனும் உணர்வுப்பூர்வமான முழக்கத்தை அனைவரும் முன்னெடுத்து, தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு முழு மூச்சாகப் பாடுபட வேண்டும் என பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆட்சிக்குழு உறுப்பினரும், பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்புக் குழுவின் தலைவருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு அழைப்பு விடுத்துள்ளார்.

பிறை, ஜாலான் பாரு அருள்மிகு முனீஸ்வரர் ஆலயத்தில் அதன் தலைவர் மேஜர் சேகரன் தலைமையில் பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான யு.ஏ.எஸ்.ஏ (UASA) தேர்வு மீள்பார்வை நூல்கள் வழங்கும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்வாண்டு, இத்திட்டம் 13-ஆவது முறையாகத் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு நூல்களை எடுத்து வழங்கி உரையாற்றியபோது பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு இவ்வாறு குறிப்பிட்டார்.
பினாங்கு மாநிலத்தில் கல்விக்கு முதலிடம் வழங்கி வரும் பிறை அருள்மிகு முனீஸ்வரர் ஆலயம், சமயப் பணிகளோடு நின்றுவிடாமல் பொதுநலச் சேவையிலும் முழுமை பெற்று விளங்குகிறது.
நமது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மொழி, சமயம், கலாச்சாரம் என அனைத்திலும் முழு மூச்சோடு ஈடுபட்டு வருவது பெருமைக்குரியது, என்று அவர் பாராட்டு தெரிவித்தார். மேலும், பினாங்கில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும் இந்த யு.ஏ.எஸ்.ஏ மீள்பார்வை நூல்கள் சென்றடைவதை அவர் உறுதிப்படுத்தினார்.

2012 முதல் தொடரும் கல்விச்சேவை
முன்னதாக, இந்நிகழ்ச்சி குறித்து விவரித்த ஏற்பாட்டுக் குழுப் பொறுப்பாளர் டத்தோ கரு. இராஜமாணிக்கம், கடந்த 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பயிற்சிப் புத்தகங்கள் வழங்கும் நற்பணி, தங்குதடையின்றி தற்போதும் தொய்வின்றித் தொடர்வதாகக் குறிப்பிட்டார். மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக ஆலயம் எடுத்து வரும் தொடர் முயற்சிகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கல்வி இலாகா நன்றி பாராட்டு
இந்நிகழ்வில் கலந்துகொண்ட பினாங்கு மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநர் திரு. மா. கார்திக் தனது உரையில், பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குத் தேர்வு மீள்பார்வை நூல்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், சமய வகுப்புகள் மற்றும் பல்வேறு நிதி உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வரும் அருள்மிகு முனீஸ்வரர் ஆலய நிர்வாகத்திற்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
தமிழ்ப்பள்ளி “மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பாடுபடுவோம்” என்ற உன்னதக் கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்வில், பினாங்கு மாநிலத்தின் 28 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆலயப் பொறுப்பாளர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர். ஆலயத்தின் தலைவர் மேஜர் மு.சேகரன் பினான்குத் தமிழ்ப்பள்ளிகளுக்கு தேவையான கல்வி திட்டத்திற்கு உதவிட ஆலயம் எப்போதும் தயார் நிலையில் உள்ளது என்று கூறினார். 28 தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பொறுப்பாளர்கள் டத்தோஸ்ரீ சுந்தராஜுவுடம் இருந்து நூல்களை பெற்றுக்கொண்டனர்.





















