கோலாலம்பூர்:
ஈப்போ, ஜாலான் ராஜா அஷ்மான் ஷாவில் நேற்று முன்தினம் அதிகாலை காரின் முகப்பு கண்ணாடியை ஹெல்மெட்டால் அடித்து உடைத்துவிட்டுத் தப்பியோடிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அதிகாலை சுமார் 1.26 மணியளவில், ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரை எச்சரிக்கும் பொருட்டு கார் ஓட்டுநர் ‘ஹோர்ன்’ (ஒலிப்பான்) செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பைக் ஓட்டுநர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட கார் ஓட்டுநருக்குச் சுமார் RM1,500 இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, பொதுச் சொத்துக்குத் தீங்கிழைத்தல் குற்றச்சாட்டின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீல நிற ‘ஹோண்டா டேஷ்’ மோட்டார் சைக்கிளில் வந்த, சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்தச் சந்தேக நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இச்சம்பவத்தின் ‘டேஷ்கேம்’ (Dashcam) காட்சிகளையும் போலீசார் தற்பொழுது ஆய்வு செய்து வருகின்றனர்.





















