கோலாலம்பூர்:
பெரிதும் எதிர்பார்க்கப்படும் கிழக்குக் கரை ரயில் இணைப்பு (ECRL) திட்டத்தின் பயணிகளுக்கான ரயில் போக்குவரத்துச் சேவைகள் (Passenger services) வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்றும், அதனைத் தொடர்ந்து 2028-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சரக்கு போக்குவரத்துச் சேவைகள் (Cargo operations) ஆரம்பமாகும் என்றும் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ‘ஆசியான் துறைமுகங்கள் & தளவாடங்கள் கண்காட்சி மற்றும் மாநாடு 2026’ (Asean Ports & Logistics Exhibition and Conference 2026) நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளை இணைக்கும் இந்த 665 கிலோமீட்டர் நீள ரயில் திட்டம், கிளாந்தான், திரெங்கானு மற்றும் பகாங் ஆகிய மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் ஒரு ‘மாற்றுவடிவ’ திட்டமாகும் என்று விவரித்தார்.
ECRL திட்டம் தற்போது 94 விழுக்காடு நிறைவடைந்துள்ளது. இதில் 519 கிலோமீட்டர் நீளமுள்ள கோத்தா பாரு – கோம்பாக் (Kota Baru-Gombak) இடையிலான இரயில் பாதை நடப்பு 2026-ஆம் ஆண்டிற்குள் முழுமையாக நிறைவடையும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் ஆசியான் பிராந்தியத்தின் பன்முக நெட்வொர்க்கை வலுப்படுத்துவதோடு, நிலம் மற்றும் கடல் வழியிலான இணைப்பை மேம்படுத்தும். குறிப்பாகச் சீனத் துறைமுகங்களுக்கும் குவாந்தான் துறைமுகத்திற்கும் இடையிலான விநியோகச் சங்கிலியை (Supply chain) இது மேலும் பலப்படுத்தும் என்றார் அவர்.
அத்தோடு ECRL திட்டத்திற்குப் பக்கபலமாக கிள்ளான் துறைமுகம், தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகம் மற்றும் குவாந்தான் புதிய ஆழ்கடல் முனையம் (கட்டம் 2) ஆகியவை நவீனமயமாக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், வெஸ்ட்போர்ட்ஸ் கட்டம் 2 மற்றும் கேரி தீவு துறைமுகத் திட்டங்களில் ஸ்மார்ட் மற்றும் பசுமைத் தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், சாலை நெரிசலைக் குறைக்கும் நோக்கிலும், சரக்கு போக்குவரத்தைச் சாலை வழியிலிருந்து இரயில் வழிக்கு மாற்றுவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாக அமைச்சர் அந்தோனி லோக் குறிப்பிட்டார். இதற்குச் சான்றாக, அண்மையில் மீண்டும் திறக்கப்பட்ட செகாமட் உள்நாட்டுத் துறைமுகம் (Segamat Inland Port) வட ஜொகூரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.



















